விபத்தில் இருவர் பலி
கேரள மாநிலம், பாலக்காடு அருகே தென்கரையை சேர்ந்தவர் விஜய்,36. அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் கட்டடத்தொழிலாளி சுதீஷ்,30. இருவரும், பொள்ளாச்சி அருகே வடக்கிபாளையம் அருகே, பாலு கார்டனில் தங்கி கட்டட வேலைக்கு சென்று வந்தனர்.நேற்று முன்தினம் இரவு, இருவரும் வேலை முடித்து கடைக்கு செல்வதற்காக நஞ்சேகவுண்டன்புதுார் ரயில்வே கேட் அருகே நடந்து சென்றனர். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம், இருவர் மீது மோதியது.அதில், விஜய் மற்றும் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த கோவை ஒக்கிலிபாளையத்தை சேர்ந்த கார்த்தி, 18, சம்பவ இடத்திலேயே இறந்தனர்.படுகாயமடைந்த சுதீஷ், ஒக்கிலிபாளையத்தை சேர்ந்த ஜோதிகிருஷ்ணா,18, ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். வடக்கிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். மோசடி குறித்து விசாரணை
பொள்ளாச்சி ஜோதிநகரை சேர்ந்த கூலித்தொழிலாளி சந்துரு, மேற்கு போலீசாரிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:மாலத்தீவில் வேலை வாங்கி தருவதாக ராஜா என்பவர் கூறினார். இதை நம்பி, அவரது வங்கி கணக்குக்கு, 66ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பினேன். அதன்பின், திருச்சி விமான நிலையம் செல்லுங்கள்; அங்கு ஒருவர் மாலத்தீவுக்கு அழைத்துச் செல்வார் என கூறினார். அதன்பின் அவரது மொபைல்போன் எண் சுவிட்ஆப் ஆகிவிட்டது.இதுபோன்று, எனது உறவினர் ஒருவரிடமும், 66 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துள்ளார். வேலை வாங்கி கொடுப்பதாக கூறி பண மோசடி செய்த, ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர். தொழிலாளி தற்கொலை
கேரள, மீனாட்சிபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மாரிமுத்து,35. இவர், முத்துலட்சுமி என்பவருடன் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆழியாறு பகுதியில் வாழ்ந்து வந்தார்.கடந்த, மூன்று நாட்களாக மது குடிக்க பணம் கேட்டு முத்துலட்சுமியிடம் சண்டையிட்டதாகவும், அவர் கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. வீட்டில் தனியாக இருந்த மாரிமுத்து, துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆழியாறு போலீசார் விசாரிக்கின்றனர்.