பொள்ளாச்சி: 'ரேஷன் கடைகளில், தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும்,' என, தமிழக அமைச்சர்களிடம், விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு மாநில தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் நட்பமைப்பு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தென்னிந்திய தென்னை சாகுபடியாளர் சங்கத்தினர் ஒருங்கிணைத்து, அமைச்சர்கள் பெரியகருப்பன், நேரு, முத்துசாமி ஆகியோரை நேரில் சந்தித்து, கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது.விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:தேங்காய் விலை வீழ்ச்சி மற்றும் தென்னை மரங்களை பாதிக்கும் நோய்களால் ஏற்படும் இழப்பு தொடர்பாக அமைச்சர்களிடம் தெரிவிக்கப்பட்டது.தமிழகத்தில், 2கோடி ரேஷன் கார்டுகளுக்கு அரசின் சார்பில், ஒவ்வொரு மாதமும் ஒரு லிட்டர் பாமாயில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து, சராசரியாக, 100 ரூபாய்க்கு வாங்கி தமிழக அரசு, 75 ரூபாய் மானியம் கொடுத்து, 25 ரூபாய்க்கு ரேஷன் கடைகளில் விற்கப்படுகிறது.தற்போது, தமிழகத்தில் தேங்காய் விலை சரிந்துள்ளதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே, ரேஷன் கடை மற்றும் சத்துணவுக்கூடங்களில் தேங்காய் எண்ணெய் வழங்குவதன் அவசியம் குறித்தும், பாமாயிலுக்கு வழங்கப்படும் மானியத்தை மாற்றி தேங்காய்க்கும், தேங்காய் எண்ணெய்க்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.மத்திய அரசின் 'நேபிட்' நிறுவனம், ஒரு லட்சம் மெட்ரிக் டன் கொப்பரையை, கிலோ 108.60 ரூபாய்க்கு ஆதாரவிலையில் கொள்முதல் செய்துள்ளது.இந்த கொப்பரையை தமிழக அரசு நேரடியாக 'நேபட்' நிறுவனத்திடம் வாங்கி, தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யும் போது, ஒரு லிட்டர், 120 ரூபாய் அடக்க விலைக்கு விற்கலாம். மானியத் தொகையை கழித்தால், 50 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும்.இது குறித்து பிப்., 7ம் தேதிக்குள் அரசின் முடிவை அறிவிக்க வேண்டும். இல்லையெனில், காலவரையற்றஉண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, கூறினர்.