கோவை;கோவையில் வாகனங்களின் எண்ணிக்கை, 25 லட்சத்துக்கும் அதிகமாகி விட்டது. தினமும், 500 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், ரோடுகள் இன்னும் பழைய நிலையிலேயே உள்ளன.குறிப்பாக, சிக்னல்களுக்கு அருகே உள்ள பஸ் ஸ்டாப்களில் நிறுத்தப்படும் பஸ்களால், மற்ற வாகனங்கள் அடையும் இன்னல்களுக்கு, அளவே இல்லை. கணபதி பஸ் ஸ்டாண்ட், பொள்ளாச்சி மெயின் ரோடு, மதுக்கரை மார்க்கெட் ரோடு, லட்சுமிபுரம் பஸ் ஸ்டாப், சேரன் நகர், வெள்ளக்கிணறு பிரிவு, வடகோவை, சவுரிபாளையம், சிங்காநல்லுார், லாலி ரோடு சிக்னல், திருச்சி ரோடு, அவிநாசி ரோடு, ஹோப்ஸ் காலேஜ் உள்ளிட்ட நகர், புறநகர் பகுதிகளில் குறுகிய ரோடுகளிலும், சிக்னல்களுக்கு அருகே உள்ள பஸ் ஸ்டாப்களில் நிறுத்தப்படும் பஸ்களால், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பிற வாகன ஓட்டுனர்கள் படாதபாடுபடுகின்றனர்.குறிப்பாக, காலை நேரத்தில் அவசர கதியில், பணிக்கு செல்வோர், பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு செல்லும் வாகனங்கள், இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி, படும் அவஸ்தைக்கு அளவே இல்லை. அந்த பஸ்களை முந்தி செல்ல முயலும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.சீரான வாகன இயக்கத்துக்கு, குறுகலான பகுதிகளில் உள்ள பஸ் ஸ்டாப்களையும், சிக்னல்களுக்கு அருகே உள்ள பஸ் ஸ்டாப்களையும், சற்று தள்ளி அமைக்க வேண்டும். அதற்கேற்ப திட்டமிட வேண்டும்.மாநகராட்சியும், மாநகர போக்குவரத்து காவல்துறையும் கைகோர்த்து, தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.