உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கால்வாயில் விழுந்த குட்டியை மீட்க தாய் யானை பாசப்போராட்டம்!

கால்வாயில் விழுந்த குட்டியை மீட்க தாய் யானை பாசப்போராட்டம்!

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, காண்டூர் கால்வாயில் தவறி விழுந்த இரண்டு மாத குட்டி யானையை மீட்டு, தாய் யானையுடன் வனத்துறையினர் சேர்த்தனர்.கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட சர்க்கார்பதியில், நேற்று முன்தினம் மாலை இரண்டு மாத குட்டியுடன், தாய் யானை உணவு தேடிச் சென்றது.அப்போது, மேற்கு தொடர்ச்சி மலைச்சரிவில் அமைந்துள்ள, பி.ஏ.பி., திட்டத்தின் காண்டூர் கால்வாயில், குட்டி யானை தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்தது. குட்டி யானையை மீட்க தாய் யானையும் காண்டூர் கால்வாயில் இறங்கி நீண்ட நேரம் போராடியது.ஆனாலும், குட்டியை மீட்க முடியாததால் தாய் யானை பிளிறி அபாய குரல் எழுப்பியது. யானை சப்தம் கேட்ட பழங்குடியின மக்கள், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த வனச்சரகர் புகழேந்தி மற்றும் வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள், யானையையும், குட்டியையும் மீட்க திட்டமிட்டனர்.தாய் யானை, குட்டியை விட்டு நகர்ந்து செல்லும் தருணத்துக்காக ஊழியர்கள் காத்திருந்தனர். தாய் யானை கொஞ்சம் நகர்ந்ததும், வனத்துறை ஊழியர்கள் கால்வாயில் இறங்கி, குட்டியை பாதுகாப்பாக மீட்டு கரைப்பகுதியில் விட்டனர். அதன்பின், கரையேறிய தாய் யானை, குட்டியை பார்த்ததும் ஓடி வந்து அரவணைத்து, தும்பிக்கையால் அணைத்துக்கொண்டது.வனத்துறையினருக்கு நன்றி சொல்லும் விதமாக தும்பிக்கையை துாக்கி காண்பித்து விட்டு, குட்டியுடன் வனத்துக்குள் சென்றது.வனத்துறையினர் வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டிருந்தால், காண்டூர் கால்வாயில் செல்லும் நீரில் விசைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும், என, வன ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை