உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விலங்குகள் உயிருக்கு ஆபத்து வனத்தில் கழிவு நீர்! வனத்துறையினர் எச்சரிக்கை

விலங்குகள் உயிருக்கு ஆபத்து வனத்தில் கழிவு நீர்! வனத்துறையினர் எச்சரிக்கை

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்குட்பட்ட ஓடந்துறையில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள், வரும் சாக்கடை கழிவு நீரால், வனவிலங்குகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மேட்டுப்பாளையம் பவானி ஆற்று பாலம் அருகே, ஊட்டி சாலையில் ஏராளமான வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், கடைகள் உள்ளன. மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதி ஓடந்துறை ஊராட்சியை ஒட்டி அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னுார் மலைப்பகுதிகளின் எல்லையாகவும் ஓடந்துறை உள்ளது.குன்னுார், கோத்தகிரி வனப்பகுதியில் மான், காட்டுப்பன்றி, யானை, சிறுத்தை, கரடி, காட்டு எருமை என ஏராளமான வனவிலங்குகள் காணப்படுகிறது.ஊட்டி சாலையில் உள்ள ஹோட்டல்கள், விடுதிகள் போன்றவற்றின் சாக்கடை கழிவு நீர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்படுகின்றன. இதனால், வனவிலங்குகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.இது குறித்து மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறியதாவது:மேட்டுப்பாளையம் வனச்சரகம் ஓடந்துறை காப்புக்காடுக்குட்பட்ட வனப்பகுதி மற்றும் வன எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளில், சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பது கண்டறியப்பட்டுள்ளது.ஊட்டி சாலை, ஓடந்துறை ஊராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், வாகனப் பழுது பார்க்கும் பணிமனைகள் என பல்வேறு இடங்களில் இருந்து இந்த கழிவு நீர் வந்துள்ளது. இந்த கழிவு நீரை உடனடியாக தடுக்கும் பொருட்டு, ஓடந்துறை ஊராட்சி தலைவர் மற்றும் காரமடை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கோவை வடக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களுக்கு தகவல் கொடுத்து, இந்த கழிவு நீரை ஆய்வு செய்ய அலுவலர்களால், மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த கழிவு நீரில் எந்த மாதிரியான கெமிக்கல்கள் உள்ளன, என முதல் கட்டமாக கண்டறியப்படும்.இது போன்ற கழிவுநீர், அடர்ந்த வனப் பகுதிக்குள் வருவதனால், வனவிலங்குகள் இதனை தவறுதலாக குடிக்கும் போது நோய்வாய்ப்பட்டு இறக்க அதிக வாய்ப்புள்ளது.குறிப்பாக மான் கூட்டங்கள் இங்கே அதிகமாக வரும் சூழ்நிலையில், இந்த கழிவு நீரை மான்கள் குடித்தால், மான்கள் இறக்கும் நிலை ஏற்படும். உடனடியாக கழிவு நீர் வனப்பகுதிக்குள் வருவதை தடுக்கவில்லை என்றால் வனத்துறை சார்பில் அதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வன ஆர்வலர் பாபு கூறுகையில், ''இப்பகுதியில் அதிக அளவில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. ஓடந்துறை ஊராட்சி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டு வருகிறது. வனவிலங்குகள் உயிர் இழக்கும் முன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை