தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், யானைகளின் வழித்தடங்களில் உள்ள தனியார் தோட்டங்களில், காங்கிரீட் தடுப்புச்சுவர் அமைத்துள்ளதால், காட்டு யானைகள் வழிதவறி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுவதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், தொண்டாமுத்தூர் வட்டாரப்பகுதி உள்ளது. இப்பகுதியில், சமீப காலமாக, நாள்தோறும் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வருகின்றன.வனத்துறையிலும், ஆட்கள் பற்றாக்குறையால், காட்டு யானைகளை வனப்பகுதியில் இருந்து வெளிவரும்போதே தடுக்க முடிவதில்லை.இந்நிலையில், காட்டு யானைகளின் வழித்தடங்களில் உள்ள தோட்டங்களில், கான்கிரீட் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளதால், காட்டு யானைகள் வழிதவறி குடியிருப்பு பகுதிகளுக்குள் படையெடுத்து வருவதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.பொதுமக்கள் கூறுகையில், 'மதுக்கரை, போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட, நல்லூர்வயல், சப்பாணிமடை போன்ற பகுதிகளில், காட்டு யானைகள் நடமாட்டம் இல்லாத நாட்கள் இல்லை.பெரும்பாலும், குடியிருப்பு பகுதிகளுக்குள் யானைகள் புகுந்து வருகிறது. பூண்டி, முள்ளாங்காடு வனப்பகுதியில் இருந்து நொய்யல் ஆற்றை கடந்து சப்பாணிமடை, நல்லூர்வயல் வழியாக, நண்டாங்கரை தடுப்பணை, கல்கொத்தி வனப்பகுதிக்கு காட்டு யானைகள் சென்று வரும். தற்போது, சப்பாணிமடை, நல்லூர்வயலில் உள்ள தோட்டங்களில், சுமார் 10 அடி உயரத்திற்கு, கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைத்துள்ளனர்.காட்டு யானைகள், அதன் வழித்தடத்தில் செல்வது தடுக்கப்பட்டு, வழிதவறி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகின்றன.ஏற்கனவே, தோட்டங்களில், பயிர் சேதம் ஏற்படுவதை தடுக்க, சூரிய சக்தியில் இயங்கும், மின்வேலிகள் அமைத்துள்ளனர். இருப்பினும், சிலர் கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைப்பதால், காட்டு யானைகள் வழிதவறி செல்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது' என்றனர்.