| ADDED : நவ 25, 2025 05:35 AM
வால்பாறை: வனவிலங்கு - மனித மோதலை தடுக்க, எஸ்டேட் தொழிலாளர்களின் வீடுகளை ஒருங்கிணைக்க வேண்டும் என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரண்டு வனச்சரகங்களிலும் காட்டு யானை, புலி, சிறுத்தை, காட்டுமாடு போன்ற வனவிலங்குகள் உள்ளன. சமீப காலமாக வால்பாறையில் வனவிலங்கு - மனித மோதலால் உயிரிழப்பு ஏற்படுவதால், ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் எஸ்டேட்டை விட்டு வெளியேறி விட்டனர். வனவிலங்கு - மனித மோதலை தடுக்க வனத்துறையினர் போதிய நடவடிக்கை எடுத்து வருவதாலும், தொழிலாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாலும், கடந்த சில ஆண்டுகளாக வால்பாறையில் வனவிலங்கு மனித மோதல் குறைந்து வருகிறது. வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வால்பாறையில், வன விலங்கு - மனித மோதலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் யானைக்கு பிடித்தமான வாழைகளை பயிரிடக்கூடாது. அதே போல் சிறுத்தைக்கு பிடித்தமான ஆடு, கோழி, நாய் போன்ற வளர்ப்பு பிராணிகளை வளர்க்கக்கூடாது. தொழிலாளர் குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள புதர்களை, அந்தந்த எஸ்டேட் நிர்வாகங்கள் அகற்ற வேண்டும். தனித்தனியாக உள்ள தொழிலாளர் குடியிருப்பு பகுதியை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்க வேண்டும். வனத்துறையினருடன் எஸ்டேட் நிர்வாகங்கள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே, வால்பாறையின் ஒட்டு மொத்த இயற்கை வளங்களையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க முடியும். இவ்வாறு, கூறினர்.