உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கல்வி உரிமை சட்டத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு இல்லாமல் பெற்றோர் பாதிப்பு

கல்வி உரிமை சட்டத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு இல்லாமல் பெற்றோர் பாதிப்பு

சிதம்பரம் : தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டத்தில் மாணவர் சேர்க்கை குறித்து, தமிழக பள்ளி கல்வித்துறை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.தமிழகத்தில், பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை மாணவர்களும், தனியார் மெட்ரிக் பள்ளிகளில், தராமன கல்வி பயில வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு ஆர்.டி.இ., (கல்வி உரிமை சட்டம்) மூலம், பள்ளி கல்வி கட்டணம் இல்லாமல், ஒவ்வொறு பள்ளியிலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான, மாணவர்கள் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை, அரசே அந்தந்த பள்ளிகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை வழங்கும். ஆர்,டி.இ., மூலம் கல்வி கற்க, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கடலூர் மாவட்டம் முழுவதும், ஆர்.டி.இ., கோட்டாவில், தங்கள் பிள்ளைகளை, மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்க, பெற்றோர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். ஒவ்வொரு பள்ளிகளிலும் 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள், தாசில்தார் முன்னிலையில், சட்ட விதிகளின்படி தகுதியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அட்மிஷன் வழங்கப்படும். இதில் சேருவதற்கு, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆர்.டி.இ., மூலம் சேர விரும்பும் மாணவர்கள், தங்கள் இருப்பிடத்திலிருந்து, சேர்க்கப்படும் பள்ளி, ஒரு கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும், அதிலும், இடையில் அரசு பள்ளிகள் எதுவும் இருக்கக் கூடாது. குறிப்பாக, தாய், தந்தை இல்லாதவர்கள், தூய்மை பணியாளர்களின் பிள்ளைகள், ஊனமுற்றோர், மூன்றாம் பாலினம், எச்.ஐ.வி., பாதித்த குழந்தைகள் விண்ணப்பித்திருந்தால், எந்தவித நிபந்தனையுமின்றி, அட்மிஷன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நிபந்தனைகள் குறித்து, பொதுமக்களுக்கு சரியான வழிமுறைகள் தெரியாததால், பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகிறது. குறிப்பாக விண்ணப்பிக்கும்போது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது என, மொபைலில் வரும் குறுஞ்செய்தி வரும். அதன் பின்பு, மாணவர்களுக்கான குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படும்போது, விண்ணப்பத்தை சரிபார்க்க வரும் அதிகாரிகள், வருவாய் துறை சார்பில் உள்ள, துல்லியமான வரைபடத்தை கையில் வைத்துக்கொண்டு, பள்ளியில் இருந்து வீட்டின் துாரத்தை கணக்கிட்டு, மனு நிராகரிப்பர். அப்போது பெற்றோர்களுக்கும்- அதிகாரிகளுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு, பல பள்ளிகளில் பெரும் பிரச்னையில் முடிகிறது. அதுமட்டுமின்றி, பல இடங்களில் அரசியல் தொடர்புகள் மூலம் பள்ளி நிர்வாகத்திற்கும், அரசு அதிகாரிகளுக்கும் நெருக்கடி கொடுத்து சீட்டு பெறும் நிலையும் தொடர்கிறது. எனவே, உண்மையாக ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், துாய்மை பணியாளர்களின் பிள்ளைகள், தாய் தந்தை இல்லாதவர்களின் பிள்ளைகள், இந்த ஆர்.டி.இ, வாய்ப்பை பயன்படுத்தி, கல்வி கற்க, வழி வகை செய்ய வேண்டும்.அதற்காக, தமிழக பள்ளி கல்வித்துறை ஆர்.டி.இ., யில் மாணவர்கள் சேருவதற்கான தகுதி மற்றும் நிபந்தனைகள் குறித்து, வரும் காலங்களில், தெளிவாக, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, பெற்றோர்கள் தரப்பில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை