| ADDED : மே 08, 2024 12:30 AM
குள்ளஞ்சாவடி : கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த புலியூரைச் சேர்ந்தவர் திருவேங்கடம், 65; இவர், வாந்தி, பேதி காரணமாக நேற்று முன்தினம் இறந்தார். குள்ளஞ்சாவடியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் அவர், சாப்பிட்ட பிறகே உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்ததாக கிராம மக்களிடையே தகவல் பரவியது. இதனால், திருமண நிகழ்ச்சியில் சாப்பிட்டவர்கள் பீதியடைந்தனர். கடலுார் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குள்ளஞ்சாவடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சிகிச்சைக்கு சேரந்தனர். இந்நிலையில், வாந்தி பேதியால் பாதிக்கப்பட்ட அதே பகுதியை சேர்ந்த நாராயணசாமி, 60; நேற்று காலை இறந்தார்.காலாவதியான மளிகை பொருட்களைக் கொண்டு, திருமண மண்டபத்தில் உணவு தயாரித்ததால் பாதிப்பு ஏற்பட்டு அடுத்தடுத்து இருவர் இறந்ததாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து இருவர் உயிரிழந்தது, புலியூர் கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குள்ளஞ்சாவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.