உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீடு கட்டும் திட்டத்தில் கட்டாய வசூல்; புவனகிரியில் பயனாளிகள் பரிதவிப்பு

வீடு கட்டும் திட்டத்தில் கட்டாய வசூல்; புவனகிரியில் பயனாளிகள் பரிதவிப்பு

குடிசையில் வாழ்ந்து வருவோருக்கு, பாதுகாப்பு அளிக்கும் வகையில், அரசு சார்பில் பல்வேறு திட்டங்களில் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படுகிறது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் சார்பில் நகர்ப்புற, ஊரக நிர்வாகத்தின் மூலம் நிதியுதவிகள் வழங்குகிறது.கடலுார் மாவட்டத்தில், என்.எல்.சி., சுரங்க விரிவாக்கப் பணி நடந்து வரும் புவனகிரி தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய கிராமங்களில், பிரதமர் திட்டத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.அதில், தகுதியான பயனாளிகளிடம் தலா 50 ஆயிரம் கட்டாய வசூல் நடக்கிறது. இதற்காக 10 வீட்டிற்கு ஒரு தனி நபர் வீதம் நியமித்து, வர்ணம் பூசுதல், கேட் போடுவது என, காரணம் கூறப்படுகிறது.வாழ்வாதாரம் இல்லாமல் குடிசையில் வாழ்ந்து வரும் ஏழை பயனாளிகளிடம் தலா 50 ஆயிரம் ரூபாய் கேட்டு பெறுவதால், அவர்களும் வேறு வழியின்றி வட்டிக்கு பணம் கேட்டு அலையும் அவலம் ஏற்பட்டுள்ளது.இதுபோல், தமிழக அரசின் கலைஞரின் கனவுத் திட்டம் வாயிலாக ஒவ்வொரு ஒன்றியத்திலும் 100க்கும் மேற்பட்ட கான்கிரீட் வீடுகள் கட்டப்பட உள்ளன. கடந்த வாரம் பூமி பூஜை போட்டு, பணிகள் துவங்கப்பட்டுள்ளன.சொந்தமாக வீடு கட்ட வசதியில்லாத ஏழை எளிய நபர்களுக்கே அரசு சார்பில் வீடுகள் கட்டித் தரப்படுகின்றன. ஆனால், இதிலும் கிடைத்தது வரை லாபம் என காசு பார்க்கும் இடைத்தரகர்களை தண்டிக்க வேண்டும்.இது தொடர்பாக கலெக்டர் உரிய விசாரணை நடத்தி, வறுமையில் வாடும் மக்களிடம் கட்டாய வசூலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ