| ADDED : மே 22, 2024 12:58 AM
பெண்ணாடம் : பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்கு வசதி இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.விருத்தாசலம் - திட்டக்குடி மார்க்கத்தில் பெண்ணாடம் அடுத்த பொன்னேரி ரயில்வே மேம்பாலம் வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடலுார், திருச்சி, சென்னை, மதுரை, தஞ்சாவூர், சேலம் உட்பட பல பகுதிகளுக்கு செல்கின்றன.வாகன ஓட்டிகள், பாதசாரிகளின் வசதிக்காக பாலத்தின் இருபுறமும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டது. இதற்காக பெ.பொன்னேரி, இறையூர் ஊராட்சிகள் சார்பில் மின்கட்டணம் செலுத்தப்பட்டது. ஓரிரு மாதங்கள் மட்டுமே எரிந்த நிலையில் மின்கட்டணம் செலுத்தாததால் மேம்பாலம் இருளில் மூழ்கியது.மேலும், போதிய பராமரிப்பின்றி மேம்பாலத்தில் பொருத்தப்பட்ட மின் விளக்குகளும் பழுதானது.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், அமைச்சர் கணேசன் ஆகியோர் பார்வையிட்டனர். ஆனால் இதுவரை மின்விளக்குகள் எரிய யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், இரவு நேரத்தில் மேம்பால பகுதி முழுவதும் இருளில் மூழ்கி கிடப்பதுடன் விபத்துகளும் தொடர்கிறது.எனவே, மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.