| ADDED : ஜூன் 11, 2024 06:18 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் பஸ் நிலைய சாலையில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியடைவது தொடர்கதையாகி உள்ளது.விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலை வழியாக சென்னை, திருவண்ணாமலை, திருப்பதி, பெங்களூரு, ஒசூர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு பஸ், லாரி, வேன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன.21 கி.மீ., துாரம் உள்ள இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட சாலை திட்டத்தில், சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து எல்.ஐ.சி., அலுவலகம் வரை உள்ள இந்த சாலையின் இரு புறங்களிலும் தனியார் சிலர் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி செல்கின்றனர்.மேலும், சிலர் தற்காலிக பந்தல் அமைத்து கடைகளை வைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதன் காரணமாக, அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தது வருகின்றனர்.எனவே, விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளை அகற்றவும், தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க விருத்தாசலம் போலீசார் முன்வர வேண்டும்.