உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மணல் குவாரி கலவர வழக்கு அமைச்சர் சிவசங்கர் கோர்ட்டில் ஆஜர்

மணல் குவாரி கலவர வழக்கு அமைச்சர் சிவசங்கர் கோர்ட்டில் ஆஜர்

கடலுார்: திட்டக்குடி அருகே மணல் குவாரி கலவரத்தில் போலீசார் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று கடலுார் கோர்ட்டில் ஆஜரானார்.கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த நெய்வாசல் கிராமத்தில் வெள்ளாற்று பகுதியில், 2015ம் ஆண்டு அரசு மணல் குவாரி இயங்கியது. இங்கு மணல் எடுக்கும் பகுதி அரியலுார் மாவட்டம், சன்னாசிநல்லுாருக்கு சொந்தமானது எனக் கூறி, அப்பகுதியினர் மண் எடுப்பதை தடுத்து போராட்டம் நடத்தினர்.சன்னாசிநல்லுார் பொதுமக்கள் மற்றும் தி.மு.க.,வினர் 400க்கும் மேற்பட்டோர், அப்போதைய தி.மு.க., எம்.எல்.ஏ., சிவசங்கர் தலைமையில் கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி கடலுார் மாவட்ட பகுதியில் இயங்கி வந்த மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் அகற்ற முயன்றபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டு, கலவரமாக மாறியது.அதில், 2 பொக்லைன் இயந்திரங்கள் சூறையாடப்பட்டு, 7 போலீசார் காயமடைந்தனர். போலீசார் தடியடி நடத்தியதில், சன்னாசிநல்லுார் கிராமத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆவினங்குடி போலீசார், தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்ட 37 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில், 5 பேர் இறந்தனர்.ஒருவர் வேறொரு வழக்கில் சிறையில் உள்ளார். இவ்வழக்கு விசாரணை கடலுார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் சிவசங்கர் உட்பட 28 பேர் கோர்ட்டில் ஆஜராகினர். மீதமுள்ள 3 பேர் ஆஜராகவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி ஜவகர், வழக்கு விசாரணையை ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.கோர்ட்டிலிருந்து வெளியே வந்த அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், 'திருச்சியில் பஸ்சில் இருந்த இருக்கையை கண்டக்டர் சரி செய்ய முயன்றபோது கீழே விழுந்துள்ளது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் புதிய பஸ்கள் வாங்காததால் தான் இது போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. புதியதாக 7000 பஸ்கள் வாங்குவதற்கு முதல்வர் நிதி ஒதுக்கியுள்ளார். தற்போது 350 புதிய பஸ்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.படிப்படியாக புதிய பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இனி அதுபோல் நிகழ்வுகள் ஏதும் நடக்காது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்