| ADDED : மே 17, 2024 11:09 PM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சியில், திருக்கண்டேஸ்வரம் 14வது வார்டை, முன்மாதிரியாக மாற்றுவதே லட்சியம் என, அ.தி.மு.க., கவுன்சிலர் செல்வகுமார் தெரிவித்தார்.எனது வார்டில் 1500 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். வார்டில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற பாடுபட்டு வருகிறேன். அனைத்து பகுதியிலும் தெருவிளக்குகள் எரிவதை உறுதிபடுத்தியுள்ளேன். 70 சதவீத சாலைகள் போடப்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிக்கு கழிவறை கட்டப்பட்டுள்ளது. வார்டில், எஞ்சியுள்ள 30 சதவீத சாலைகளை புதுப்பிக்க வேண்டும். வெள்ளப்பாக்கத்தான் வாய்க்கால் குறுக்கே இரண்டு சிறிய பாலங்கள் கட்ட வேண்டும். அரசு பொது தேர்வில் அதிக தேர்ச்சி பெறும் நகராட்சி உயர்நிலைப்பள்ளியை மாணவர்கள் நலன்கருதி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். பல ஆண்டுகளாக தோப்பு தெருவில் வசித்து வரும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். சுடுகாடு பாதையை சரி செய்ய வேண்டும். அங்கன்வாடி மையத்துக்கு சொந்த கட்டடம், கடலூர்- பண்ருட்டி சாலையில் இருந்து கலிஞ்சிக்குப்பம் செல்ல பெண்ணையாறு வரை சாலை வசதி போன்ற பல கோரிக்கைகளுக்காக தொடர்ந்து அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகிறேன்.சேர்மன் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் ஒத்துழைப்போடு அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றி, முன்மாதிரி வார்டாக மாற்றுவதே எனது லட்சியம். இவ்வாறு அவர் கூறினார்.