| ADDED : ஜூன் 30, 2024 05:03 AM
கடலுார் கடலுார் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு, பிறவி குறைபாடுகளை கண்டறிவதற்கான பயிற்சி முகாமை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.கடலுார் அரசு மருத்துவமனையில், பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவி குறைபாடுகளை விரைவாக கண்டறிவதற்கான பயிற்சி முகாம் நடந்தது. கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து, பயிற்சிக்கான கையேட்டினை வெளியிட்டார்.அப்போது அவர் கூறியதாவது:குழந்தைகளுக்கு பிறவி குறைபாடு அதிகமாக உள்ளது. 35ல் ஒரு குழந்தைக்கு இப்பாதிப்பு ஏற்படுகிறது. இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்தால் முழுவதும் குணமாக்க முடியும். அதேபோல் துறுதுறு குழந்தை கற்றலில் குறைபாடு போன்ற மூளை வளர்ச்சி பாதிப்பு நோய்களையும் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கவும், அதன் எண்ணிக்கையை குறைக்கவும், முழுவதும் குணமாக்கவும் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.பயிற்சியில் 2 மணி நேரம் உரையாற்றுதல், 2 மணி நேரம் செயல்முறை அளிக்கப்பட உள்ளது. பயிற்சி பெறும் டாக்டர்களுக்கு 1,200 ரூபாய் மதிப்புள்ள விளையாட்டு பொருள்கள், கருவிகள் அடங்கிய ஒரு பெட்டி வழங்கப்படவுள்ளது. இதன் உதவியால் உள்ள குழந்தைகளை ஆரம்ப நிலையிலே எளிதாக கண்டறியலாம்.குழந்தையின் மூளை வளர்ச்சியை சோதித்து மதிப்பிடுவதற்கு தடுப்பூசி மற்றும் குழந்தை வளர்ச்சி பருவங்கள் அட்டவணை மற்றும் மேன்மையான குழந்தை வளர்ப்பு கையேடு வெளியிடப்பட்டு, தாய்மார்களுக்கு இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது. பெற்றோர் குழந்தையின் வளர்ச்சியை பரிசோதித்து அட்டவணையில் டிக் செய்து கொள்ளலாம். பின்தங்கிய வளர்ச்சி இருந்தால் உடன் டாக்டரை அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார்.முகாமில் கடலுார் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஹிரியன் ரவிக்குமார், மாவட்ட சுகாதார அலுவலர் பொற்ககொடி, கடலுார், மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக்பாஸ்கர், ஒருங்கிணைப்பாளர் சிவப்பிரகாசம், நிலைய மருத்துவ அலுவலர் கவிதா கலந்துகொண்டனர்.