விருத்தாசலம் : போலீசுக்கு தகவல் கொடுப்பதாக எழுந்த சந்தேகத்தால் விருத்தாசலம் கூழ் வியாபாரியை கொலை செய்ததாக கைதானவர்கள் போலீஸ் விசாரணையில் கூறினர்.கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ராமச்சந்திரன்பேட்டையைச் சேர்ந்தவர் கூழ்மணி (எ) சின்னதுரை, 40. கோர்ட் முன் தள்ளுவண்டியில் கூழ் வியாபாரம் செய்து வந்தார். கொலை, கொள்ளை வழக்கிலும் ரவுடி கும்பலுடன் நெருங்கிய தொடர்பும் கொண்ட இவரை கடந்த இரண்டு மாதங்களாக காணவில்லை. அவரது மனைவி சித்ரா, 38, கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். சப் இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையிலான டெல்டா பிரிவு போலீசார் விருத்தாசலத்தில், சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த சண்முகம், 24; ரவி (எ) குள்ளன், 28; அசோக்குமார், 30; கருமணி, 25; ஆகியோரை பிடித்து விருத்தாசலம் போலீசில் ஒப்படைத்தனர்.போலீஸ் விசாரணையில் அவர்கள் கூறியதாவது:எங்கள் கூட்டாளியான சின்னதுரை, நாங்கள் கொள்ளையடிக்க போடும் திட்டங்களைப் போலீசுக்குத் தகவல் கொடுப்பதாக எங்களுக்குச் சந்தேகம் வந்தது.
அதனால் கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி இரவு சின்னதுரையை குடிப்பதற்காக மணிமுக்தா ஆற்றிற்கு அழைத்துச் சென்று ஐந்து பேரும் குடித்தோம்.போதை ஏறிய பின் சின்னதுரையின் கழுத்தை நெறித்தோம். சாகாததால் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொன்றோம். அவர் அணிந்திருந்த ஆடைகளை கழற்றி உடலை அருகிலே குழி தோண்டி புதைத்தோம். துணிகளை அருகில் காட்டுப் பகுதியில் தீவைத்து எரித்தோம் என ஒப்புக் கொண்டனர்.அதனையடுத்து நான்கு பேரும் மணிமுக்தா ஆற்றில் சின்னதுரையை புதைத்த இடத்தை அடையாளம் காட்டினர். டி.எஸ்.பி., அறிவழகன், தாசில்தார் சரவணன், இன்ஸ்பெக்டர் சீராளன் முன்னிலையில் பிணம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடந்தது. பிணம் புதைக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலானதால் வெறும் எலும்பு கூடுகள் மட்டுமே இருந்தன.இந்த கொலை வழக்கு தொடர்பாக சண்முகம், ரவி, அசோக்குமார், கருமணி ஆகிய நான்கு பேரை கைது செய்த போலீசார், கொலைக்கு மூளையாக இருந்த கடலூர், சாமிப்பிள்ளை நகரைச் சேர்ந்த பாருக்கான், 32; ராஜசேகர், 23; ஆகியோரை தேடி வருகின்றனர்.