| ADDED : செப் 14, 2011 12:07 AM
சிறுபாக்கம்:உள்ளாட்சித் தேர்தலில் கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளில்
போட்டியிட முடிவு செய்துள்ளவர்கள் பேச்சுவார்த்தை மற்றும் ஊரில் பொது ஏலம்,
கோவில் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை முடித்துக் கொடுத்து போட்டியின்றி வெற்றி
பெற தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.மங்களூர் ஒன்றியத்தில் 66
ஊராட்சிகளும், நல்லூர் ஒன்றியத்தில் 64 ஊராட்சிகளும் உள்ளன. மிகவும்
பின்தங்கிய இவ்விரு ஒன்றியங்களிலும் ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு கடும்
போட்டி நிலவி வருகிறது.ஊராட்சியில் தீர்க்கப்படாத பொது பிரச்னைகள், கோவில் கட்டுதல், நீண்ட
நாட்களாக நடத்தப்படாத கோவில் திருவிழாக்கள் நடத்துவது, பிரிவு வாரியாக
சுழற்சி முறை அல்லது ஏலம் விட்டு தலைவர் பதவிக்கு போட்டியின்றி ஆட்களை
தேர்ந்தெடுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.கடந்த தேர்தலில்
மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஊராட்சித் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
செய்யப்பட்டனர். வரும் தேர்தலில் ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு கடும்
போட்டி ஏற்பட்டுள்ளதால் போட்டியின்றி தலைவர்களை தேர்வு செய்வதில் கடும்
சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு
செய்துள்ளவர்கள் வைட்டமின் 'ப'வை மூலதனமாகக் கொண்டு தன்னை எதிர்த்து
தேர்தல் களம் இறங்க உள்ளவர்களை சரி கட்டும் முயற்சியில்
ஈடுபட்டுள்ளனர்.அதேப்போன்று, தங்கள் ஊராட்சியில் உள்ள பொது பிரச்னைகளை
தீர்த்து வைக்க பொது நிதி வழங்கவும் தயாராகி வருகின்றனர். மேலும், எதிர்
வரும் தேர்தலை கருத்தில் கொண்டு தங்கள் ஆதரவாளர்களுக்கு உற்சாக பானம்
உள்ளிட்டவைகளை வாங்கிக் கொடுத்து ராஜ உபசாரம் செய்து வருகின்றனர்.ஊராட்சித்
தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவுவதால் சில கிராமங்களில் பொது ஏலம்
விடவும் கிராம முக்கியஸ்தர்கள் முடிவு செய்துள்ளனர். எப்படியேனும்
ஊராட்சித் தலைவராக வேண்டும் என முடிவு செய்துள்ளவர்கள், தேர்தலில்
போட்டியிட்டு செலவு செய்து வெற்றி பெறுவோமா என அச்சத்துடன் இருப்பதை விட
அந்த பணத்தை ஊர் பொது காரியத்திற்கு கொடுத்து தேர்தலில் போட்டியின்றி
வெற்றி பெறுவதே மேல் என முடிவு செய்துள்ளனர்.இதன் காரணமாக உள்ளாட்சித்
தேர்தல் தேதி அறிவிக்காத நிலையிலேயே கிராமங்களில் தேர்தல் திருவிழா களை
கட்டத் துவங்கியுள்ளது.