உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விவசாய கருவிகள் கிடைப்பதில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு: சம்பா சாகுபடிக்கு வீராணத்தில் தண்ணீர் திறக்க கோரிக்கை.

விவசாய கருவிகள் கிடைப்பதில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு: சம்பா சாகுபடிக்கு வீராணத்தில் தண்ணீர் திறக்க கோரிக்கை.

கடலுார்: சம்பா சாகுபடிக்கு நேரடி நெல் விதைப்பு பணி துவங்கியுள்ளதால், வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். வேளாண் இணை இயக்குனர் ஏழுமலை, கலெக்டர் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், விவசாயிகள் குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:சம்பா சாகுபடிக்கு நேரடி நெல் விதைப்பு பணி துவங்கியுள்ளதால், வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். பூதங்குடி, அள்ளூர், பரிபூரணநத்தம் பகுதிகளில் குறுவை நெல் பயிரில் மஞ்சள் நோய் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுவை தொகுப்பு திட்ட நிதி 4000 ரூபாயை விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும்.சம்பா சாகுபடிக்கு நீண்ட கால மத்திய கால நெல் விதைகளான ஏ.டீ.டி.,36, ஏ.டீ.டி.,46 பொன்னி விதை நெல் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சம்பா சாகுபடிக்கு யூரியா, டி.ஏ.பி., - பொட்டாஷ் ஆகியவை கூட்டுறவு வங்கி முலம் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். திட்டக்குடி பகுதியில் காட்டுப் பன்றி தொல்லையிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பூதங்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். பரங்கிப்பேட்டை அடுத்த வடக்கு பிச்சாவரம், டி.எஸ்.,பேட்டை, கிள்ளை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேர்க்கடலை பயிர்கள் சில நாட்களாக பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் பார்வையிட்டு கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.மங்களூர் பகுதியில் ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகள் முறையாக நடக்கவில்லை. வேலை நடந்ததாக பில் போட்டு பணத்தை எடுத்துக் கொள்கின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பண்ருட்டி பகுதியில் உள்ள மூன்று ஏரிகளை துார்வார வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த ஏரிகளை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். உளுந்தாம்பட்டு புதிய நெல் கொள்முதல் நிலையத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்.சித்தேரி வாய்க்காலை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் துறையில் மானியத்தில் விவசாய கருவிகள் கேட்டு விண்ணப்பித்தாலும் எந்த விவசாய கருவிகளும் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை.அதனைத் தொடர்ந்து பேசிய கலெக்டர், விவசாயிகளின் கோரிக்கை மற்றும் மனுக்கள் மீது விசாரணை நடத்தி அதிகாரிகள் உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ