| ADDED : டிச 27, 2025 06:44 AM
சிறுபாக்கம்: வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் ஈடுபட தி.மு.க., நிர்வாகிகளிடம் அமைச்சர் கணேசன் அறிவுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை: கடலுார் தி.மு.க., மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த, 19ம் தேதி வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலை பெற்ற நகர, பேரூர், ஒன்றிய செயலர்கள் உடனடியாக பாகம் வாரியாக பிரித்து அந்தந்த பாக பி.எல்.ஏ., 2விடம் ஒப்படைக்க வேண்டும். பட்டியலில் விடுபட்டவர்களையும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களையும், புதியதாக இடம் பெயர்ந்த வாக்காளர்களின் பெயர்களை படிவம், 6ல் சேர்க்கும் பணியில் தி.மு.க.,வினர் ஈடுபட வேண்டும். உண்மையாக உள்ள வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டிருந்தால், அவர்களின் பெயரை மீண்டும் அதே இடத்தில் சேர்த்திட படிவம் பூர்த்தி செய்து வழங்க உதவ வேண்டும். இறந்தவர்கள், இடம் மாறியவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தால், அவர்களின் பெயரை நீக்கும் பணியில் ஈடுபட வேண்டும். வரும் 2026ல் நடக்கும் சட்டசபை தேர்தலில் தற்போது வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி முக்கியமானது என்பதால் அனைவரும் கவனமுடன் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.