உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோவிலை இடிக்க எதிர்ப்பு: பண்ருட்டி அருகே பதற்றம்

கோவிலை இடிக்க எதிர்ப்பு: பண்ருட்டி அருகே பதற்றம்

நடுவீரப்பட்டு: பண்ருட்டி அருகே கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் போராட்டம் நடத்தியதால் பதற்றம் நிலவியது. கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பெரிய நரிமேடு கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் பழுதடைந்ததால், எதிரில் புதிதாக கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த, அதே பகுதியை சேர்ந்த சுந்தரம் தலைமையிலான குழுவினர் முடிவு செய்தனர். இதற்கு, அதே பகுதியை சேர்ந்த செந்தில் தலைமையிலான குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், பழைய கோவிலில் உள்ள மூலவர் சிலையை நேற்று காலை சுந்தரம் தலைமயிலான குழுவினர், புதிய கோவிலில் வைக்க வெளியே எடுத்து வந்தனர். இதனையறிந்து சம்பவ இடத்தில் திரண்ட செந்தில் தலைமையிலான குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து, பழைய கோவிலை இடிக்கக் கூடாது எனக் கூறினர். இருதரப்பினரும் கோவில் எதிரில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவியது. தகவலறிந்த நடுவீரப்பட்டு இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, முத்தாண்டிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், பண்ருட்டி தாசில்தார் பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யலாம் என கூறியதன் பேரில் இருதரப்பும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை