விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே மணிமுக்தாற்றில், 25.20 கோடி ரூபாய் செலவில் தடுப்பணை அமைக்கும் பணிக்கு, சட்டசபையில்முதல்வர் ஒப்புதல் வழங்கியதால் விவசாயிகள், பொதுமக்கள்மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கோமுகி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மணிமுக்தாறு வழியாக, கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மேமாத்துார் அணைக்கட்டு வந்தடையும். அங்கிருந்து பாசன வாய்க்கால் வழியாக கொடுக்கூர் பெரிய ஏரி, சித்தேரி, சின்னக்குட்டி உடையார், பெரம்பலுார், பரவளூர், தொரவளூர், சாத்துக்கூடல், கோமங்கலம் உட்பட 15 கிராம ஏரிகளுக்கு நீர்ப்பிடிப்பு கிடைக்கிறது.இதன் மூலம், இப்பகுதிகளில் 4,500 ஏக்கர் விளை நிலங்கள் நேரடியாகவும், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன. நெல், கரும்பு, வேர்க்கடலை, உளுந்து மற்றும் தோட்டக்கலைப் பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்தனர்.மேலும், மணிமுக்தாறு வழியாக உபரி நீர் வழிந்தோடி, சேத்தியாதோப்பு அணைக்கட்டு வழியாக கடலில் கலந்து வீணாகிறது. இதனால் விருத்தாசலம் அடுத்த பரவளூர், மணவாளநல்லுார், தொட்டிக்குப்பம், எருமனுார் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள் நீர்ப்பாசன வசதியின்றி சிரமமடைந்தனர். அதைத் தொடர்ந்து, விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் பரவளூர் மணிமுக்தாற்றில், 12 கோடி ரூபாயில் தடுப்பணை கட்டப்பட்டது.இந்நிலையில், மணிமுக்தா நீர்ப்பாசன விவசாயிகள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் தனவேல் தலைமையில், மணவாளநல்லுார் மணிமுக்தாற்றில் தடுப்பணை கட்டி, தண்ணீரை சேமித்து விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என, போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும் நிலத்தடி நீர் மட்டும் பாதிக்கப்படுவதாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மணவாளநல்லுாரில் இயங்கிய அரசு மணல் குவாரியும் விவசாயிகள் போராட்டத்தால் மூடப்பட்டது.அதைத் தொடர்ந்து, விருத்தாசலம் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் கோப்புகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் மணவாளநல்லுார் மணிமுக்தாற்றில் தடுப்பணை கோரிக்கையை வலியுறுத்தியிருந்தார்.இதற்கிடையே, கடந்த மாதம் 15ம் தேதி, மணிமுக்தாறு நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மணிமுக்தாற்றில் தடுப்பணை கோரி, விருத்தாசலம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில், தற்போதைய சட்டசபை கூட்டத்தில், ஆறுகளில் வெள்ளக்காலங்களில் கிடைக்கும் நீரை சேமித்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், வெள்ளநீரின் தீவிரத்தை கட்டுப்படுத்தவும் 7 மாவட்டங்களில் 10 இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்படும் என, முதல்வர் அறிவித்து, 71.86 கோடி ரூபாயை ஒதுக்கி அனுமதி வழங்கினார்.அதில், கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் மணிமுக்தாற்றில், 25 கோடியே 20 லட்சம் ரூபாயில் தடுப்பணை கட்டும் பணியும் அறிவிக்கப்பட்டது. விவசாயிகளின் தொடர் போராட்டம், தொகுதி எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் முயற்சி காரணமாக மணிமுக்தாற்றில் தடுப்பணை கட்டப்பட உள்ளதால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.