| ADDED : பிப் 04, 2024 04:48 AM
கடலுார் : 'மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வலிமை படைத்தவர்கள் ஆசிரியர்கள்' என, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதுார கல்வி இயக்கக இயக்குனர் சீனிவாசன் பேசினார். 'தினமலர்' நாளிதழ் சார்பில், கடலுாரில் நேற்று நடந்த ஆசிரியர்களுக்கான மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கை துவக்கி வைத்து அவர் பேசியது:ஆசிரியர் பணி என்பது மதிக்கப்படக்கூடிய மிக முக்கியமானது. இளைஞர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய முக்கிய வலிமை அவர்களிடமே உள்ளது. எந்த செயலை செய்தாலும் சரியான திட்டமிடல் வேண்டும். அப்போதுதான், சிறப்பாக செய்ய முடியும். இன்றைய காலகட்டத்தில் உயர்கல்வித் துறையை விட பள்ளிக் கல்வித்துறையில் தான், ஆசிரியர்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். மாணவர்களை ஊக்குவிப்பதற்கான ரோல் மாடல் ஆசிரியர்கள்.இந்திய நாடு, உலகில் பிற நாடுகளை விட அதிக இளைஞர்களை கொண்டது. இதுதான் நமக்கு மிகப்பெரிய பலம். நாட்டில் அனைத்து துறைகளிலும் மாற்றங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதற்கேற்ப, மாணவர்களை தயார்படுத்த வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லக் கூடியவர்கள் இளைஞர்கள்.மாணவர்கள் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வது ஆசிரியர்களை தான். பெற்றோரை விட மாணவர்களிடம் அதிக நேரம் செலவிடுவது அவர்கள் மட்டுமே. எதிர்காலத்தில் ஆசிரியர்களாக வர வேண்டும் என்ற எண்ணம் மாணவர்களுக்கு தோன்றும். ஆசிரியர்கள் பேசக்கூடிய வார்த்தைகள், எடுக்கக் கூடிய பாடப்பிரிவுகள் மீது மாணவர்களுக்கு ஈர்ப்பு ஏற்படும். அரசுப் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்கள் என, வேறுபடுத்தி பார்க்கக் கூடாது. மாணவர்களுக்கு முதல் ரோல் மாடல் ஆசிரியர்கள். மாணவர்கள் பெரிய தலைவர்களாக வர வாய்ப்பு உள்ளது. இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு மாணவர்கள் கொண்டு செல்ல ஆசிரியர்கள் உதவியாக இருக்க வேண்டும். தினசரி செய்தித்தாள் நிகழ்வுகளை மாணவர்களிடம் ஆசிரியர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். முடிந்தவரை மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.