உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெலாந்துறை அணை தண்ணீர் செல்வதில் சிக்கல்! பிரதான வாய்க்காலை துார் வார கோரிக்கை

பெலாந்துறை அணை தண்ணீர் செல்வதில் சிக்கல்! பிரதான வாய்க்காலை துார் வார கோரிக்கை

கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த பெலாந்துறையில் வெள்ளாற்றின் குறுக்கே கடந்த 1876ம் ஆண்டு, 200.80 மீட்டர் நீளத்திற்கு அணைக்கட்டு கட்டப்பட்டது. இதில், மழை காலங்களில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை கிளை வாய்கால்கள் மூலம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள சேதுவராயன்குப்பம், ஆனந்தகுடி, டி.வி.புத்துார், ராஜேந்திரபட்டினம், பூண்டி, கொக்கரசன்பேட்டை, குணமங்கலம், வண்ணாங்குடிகாடு, சேல்விழி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 18 பொதுப்பணித்துறை ஏரிகளுக்கு தண்ணீர் செல்வது வழக்கம்.இந்த தண்ணீரை பயன்படுத்தி பெலாந்துறை, பாசிக்குளம், கணபதிகுறிச்சி, ராஜேந்திரப்பட்டிணம், டி.வி.புத்துார், ஸ்ரீமுஷ்ணம் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் நெல், கரும்பு, கேழ்வரகு மற்றும் தோட்டப்பயிர்களை 12 ஆயிரத்து 234 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்து வருகின்றனர்.அணைக்கட்டில் இருந்து பாசனத்திற்கு திறந்து விடும் பிரதான வாய்க்கால் முறையாக துார் வாரப்படாமல் செடி, கொடிகள் மண்டி, கரைகள் வலுவிழந்துள்ளன. வடகிழக்கு பருவ மழை நான்கு மாதங்களில் துவங்க உள்ள நிலையில், பெலாந்துறை அணைக்கட்டில் இருந்து பிரதான பாசன வாய்க்காலில் நீர் திறந்து விடும் போது, 18 பாசன ஏரிகளும் முழு அளவு தண்ணீர் நிரம்புவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.இதனால் சம்பா நடவு மற்றும் தோட்ட பயிர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, பெலாந்துறை அணைக்கட்டில் இருந்து பாசன ஏரிகளுக்கு செல்லும் பிரதான பாசன வாய்க்காலை வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் துார் வார வேண்டும் என 50 கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, பெலாந்துறை கிராம விவசாயிகள் கூறுகையில், 'பெலாந்துறை அணைக்கட்டு பாசன கிளை வாய்க்காலின் கரைகள் பல இடங்களில் சேதமடைந்துள்ளன. மேலும், வாய்க்கால் நெடுகிலும் சீமை கருவேல மரங்கள், செடி, கொடிகள் அதிகளவில் மண்டியுள்ளன.பெலாந்துறை அணைக்கட்டு பகுதியிலேயே இந்த நிலை என்றால், கடைமடையில் உள்ள ஏரிகளுக்கு முழு அளவு தண்ணீர் செல்வதும் சந்தேகம் தான். பருவமழை துவங்கும் முன் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார் வார மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை