வடலூர் : கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் வடலுார் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும், போக்குவரத்து மாற்றங்கள் குறித்து அனைத்து துறை சார்பாக கலந்தாய்வுக் கூட்டம் சபை வளாகத்தில் நடந்ததுநெய்வேலி டி.எஸ்.பி., சபியுல்லா தலைமை தாங்கினார். இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், வடலுார் சேர்மன் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர் சுரேஷ் குமார் வரவேற்றார். கூட்டத்தில், ; நாளை (25ம் தேதி) நடைபெறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக அன்று அதிகாலை, 4 மணி முதல், இரவு 10 மணி வரை தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி வடலுார் காவல்துறை சார்பில், 3 தற்காலிக கார், வேன் மற்றும், பேருந்து நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலுாரில் இருந்து வரும் வாகனங்கள் ராசாக்குப்பம், இளங்கோ நகர் புதிய பைபாஸ் அருகில் வலது பக்கமும், பண்ருட்டியிலிருந்து வரும் வாகனங்கள் அகர்வால் பேக்கரி வழியாக ராகவேந்திரா சிட்டியிலும், சேத்தியாத்தோப்பில் இருந்து வரும் வாகனங்கள் கருங்குழி கைகாட்டி இடது புறமாக திரும்பி, கருங்குழி, மேட்டுக்குப்பம் வழியாக வீணங்கேணி டி.என்.சி.எஸ்.சி., இடத்திலும், நிறுத்த வேண்டும். மேற்கண்ட அனைத்து தற்காலிக வாகனம் நிறுத்தும் இடங்களில் இருந்து வள்ளலார் ஜோதி தரிசனம் காண செல்லும் சன்மார்க்க பக்தர்களுக்கு தற்காலிக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் அன்று சென்னை, கடலூர், திருச்சி, சேலம், கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள், கார், வேன், 25ம் தேதி அதிகாலை 4 மணி முதல், இரவு 10 மணி வரை வடலுார் வராமல் வேறு வழிகளில் செல்ல தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி கடலுாரில் இருந்து விருத்தாசலம் செல்லும் அனைத்து பேருந்துகளும் ராசாக்குப்பம் புதிய பைபாஸ் அருகில் இடது புறமாக திரும்பி கருங்குழி கைகாட்டி, மேட்டுக்குப்பம், வீணங்கேணி வழியாக விருத்தாசலம் செல்ல வேண்டும். விருத்தாச்சலத்தில் இருந்து கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் வாகனங்கள் மந்தாரக்குப்பம், நெய்வேலி டவுன்ஷிப், நெய்வேலி ஆர்ச், கொள்ளுக்காரன்குட்டை, சத்திரம், குள்ளஞ்சாவடி மற்றும் ஆலப்பாக்கம் வழியாக செல்லுமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வடலூர் பண்ருட்டி செல்லும் வாகனங்களின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கடலுார் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்ணுத்தோப்பு பழைய பாலம் அருகில் இடது பக்கத்தில் தற்காலிக தரைப்பாலம் போடப்பட்டு பொது போக்குவரத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.சத்திய ஞான சபை செயல் அலுவலர் ராஜா சரவணகுமார், நகராட்சி கமிஷனர் குணசேகரன், குறிஞ்சிப்பாடி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் வினோத், திமுக நகர செயலாளர் தமிழ்ச்செல்வன், வடலூர் வள்ளலார் வர்த்தக சங்க கௌரவ தலைவர் ஞானசேகரன், தலைவர் கலைச்செல்வன், போக்குவரத்து துறை தீயணைப்புத்துறையினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.