உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வெள்ளாற்று பால இணைப்பு சாலை பணி துரிதப்படுத்தப்படுமா? கிள்ளையில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

வெள்ளாற்று பால இணைப்பு சாலை பணி துரிதப்படுத்தப்படுமா? கிள்ளையில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

பரங்கிப்பேட்டை : கிள்ளையில், பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு துவங்கியுள்ள வெள்ளாற்று பாலம் இணைப்பு சாலைப் பணியை, விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் இருந்து கிள்ளை பேரூராட்சி பகுதியை இணைக்கும் வகையில், வெள்ளாற்றில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பாலம்அமைக்கப்பட்டது. இதனால், பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை பேரூராட்சி பகுதி மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.ஆனால், இப்பாலத்தின் இரு புறமும் இணைப்பு சாலை சீரமைக்காததால், சாலை குண்டும், குழியுமாகபோக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியது. கடும் சிரமத்திற்கிடையே கடந்த பல ஆண்டுகளாக மக்கள் சாலையை பயன்படுத்தி வந்தனர்.

தினமலரால் விமோசனம்

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமம் குறித்து, 'தினமலர்' நாளிதழில், படத்துடன் செய்தி வெளியிட்டு, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து போரட்டங்கள் நடத்தினர். ஆனால், சாலையை சீரமைப்பதில், கிள்ளை பேரூராட்சி நிர்வாகத்திற்கும்,நெடுஞ்சாலை துறையினருக்கும் இடையே போட்டி நிலவியது.இருவருமே எங்களுக்கு சாலை வராது என தெரிவித்ததால் சாலை சீரமைப்பதில் சிக்கல் எழுந்தது.இந்நிலையில் வெள்ளாற்று பாலம் இணைப்பு சாலையை, சீரமைக்க வலியுறுத்தி மா.கம்யூ.,வினர் சாலை மறியல்போராட்டம் நடத்தினர்.அப்போது, தாசில்தார் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது.அதையடுத்து, கலெக்டர் உத்தரவின்படி, வெள்ளாற்று பாலத்தில் இருந்து கிள்ளைக்கு செல்லும் இணைப்பு சாலையை முதற்கட்டமாக சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு கிள்ளை பேரூராட்சி சார்பில் கனிம வள நிதி 49 லட்சம் ரூபாய் செலவில் 422 மீட்டர் நீளமும் 7 மீட்டர் அகலத்தில் சாலை புதுப்பிக்கும் பணி சில தினங்களுக்கு முன் துவங்கியது.

வாகன ஓட்டிகள் அவதி

தற்போதைய நிலையில், சாலை போடுவதற்கு ஜல்லிகள் கொட்டி நிரவப்பட்டுள்ளது. ஆனால், பணிகளை துரிதமாக மேற்கொள்ளாததால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கிடையே சாலையை கடந்து செல்லும் நிலை உள்ளது.எனவே, பணிகள் துரிதப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாலத்தில் இருந்து பரங்கிப்பேட்டை மார்க்கமாக செல்லும் இணைப்பு சாலையையும் விரைந்து சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மானம்பாடி சாலை மோசம்

பரங்கிப்பேட்டை வெள்ளாற்று பாலத்தில் இருந்து கிள்ளை செல்வதற்கு இணைப்பு சாலை பணி, நீண்ட கால போராட்டத்திற்கு பிறக துவங்கி நடந்து வருகிறது. அதே சமயத்தில், அந்த சாலையில், மானம்பாடி பஸ் நிலையத்தில் இருந்து கிள்ளை வரையில் சுமார் முக்கால் கிலோ மீட்டர் துார சாலை, மோசமான நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இந்த சாலையில் வாகனங்கள், பள்ளத்தில விழுந்து எழுந்து செல்லும் நிலையில், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த சாலையையும் விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை