உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தமிழகத்தில் முதன் முறையாக தர்மபுரியில் பலுான் தியேட்டர் திருமணம், பிறந்த நாள் விழாக்கள் நடத்தலாம்

தமிழகத்தில் முதன் முறையாக தர்மபுரியில் பலுான் தியேட்டர் திருமணம், பிறந்த நாள் விழாக்கள் நடத்தலாம்

பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில், தமிழகத்திலேயே முதன் முறையாக பலுான் தியேட்டர் அமைக்கப்பட்டுள்ளது.பொம்மிடியைச் சேர்ந்த அக்குபஞ்சர் டாக்டர் ரமேஷ், 58. இவர், சென்னையில் சினிமா துறையில் ஈடுபட்டு வந்தார். மாடர்ன் தியேட்டரை உருவாக்க நினைத்து, மும்பை சென்ற போது ராட்சத பலுானுக்குள் சினிமா தியேட்டர் இருப்பதை கண்டார். அதேபோல, தன் சொந்த ஊரான பொம்மிடியில் அமைக்க திட்டமிட்டார். இதற்காக டில்லியைச் சேர்ந்த பிக்சர் டைம் நிறுவனத்துடன் இணைந்து, பொம்மிடி பஸ் ஸ்டாண்ட் முன், 20,000 சதுரடியில் ராட்சத பலுான் வாயிலாக, நவீன வசதி உடைய குளிர்சாதன தியேட்டரை அமைத்துள்ளார். இது, முழுதும் கட்டடங்கள் இல்லாமல், பலுானால் அமைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ரமேஷ் கூறியதாவது:நகரத்தில் உள்ள தியேட்டரை போல கட்டடங்கள் இல்லாமல், பலுானால் அமைக்கப்பட்டுள்ளது. 140 பேர் அமரக்கூடிய வகையில் இருக்கைகள், படம் பார்க்கும் போது மிக சிறந்த ஒலி அமைப்பு உள்ளிட்ட வசதிகள் உள்ளன. தற்போது, சாதாரண அளவிலேயே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், திருமணம், பிறந்தநாள், மற்ற இல்ல விழாக்கள் நடத்தி கொள்ளலாம். இதற்காக திரை அருகில் மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் போது, தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற திரைப்படங்களையும் பார்த்து மகிழலாம்.பலுான் தியேட்டர் என்பதால் பஞ்சராகி விடும்; காற்று வீசினால் பாதிப்பு ஏற்படும் என்று பயப்பட தேவையில்லை. எந்த வித பாதிப்புகளும் இல்லாமல் பாதுகாப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தியேட்டரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனில், மூன்று மணி நேரத்தில் மாற்றலாம். டிக்கெட் கவுன்டர், கேன்டீன், புராஜெக்ட் ரூம் அமைக்கப்பட்டுள்ளது.திரையரங்கில் பல்வேறு வசதிகள் உள்ளன. சாதாரணமாக தியேட்டர் கட்ட 4 கோடி ரூபாய் வரை செலவாகும். பலுான் தியேட்டர் அமைக்க, ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே செலவாகிறது. பலுான் தியேட்டர் அமைப்பது குறித்து, பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பலர் இங்கு வந்து கேட்டுச் செல்கின்றனர். தமிழகத்தில் முதன்முறையாக பொம்மிடியில் அமைக்கப்பட்டுள்ளது. போச்சம்பள்ளி, நல்லம்பள்ளி ஆகிய இடங்களிலும் அமைப்பதற்காக திட்டமிட்டுள்ளோம். பலுான் தியேட்டர் பொதுமக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. விரைவில் திறக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை