ஓசூர் : தமிழகத்தின் எல்லையான ஓசூரில் எப்போதும் குளிர்ந்த காலநிலை நிலவும். ஏப்., மே மாதங்களில் கூட பெரிய அளவில் வெயிலின் தாக்கம் இருக்காது. ஆனால், தற்போது காலநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. வரலாறு காணாத வகையில், ஓசூர் பகுதியில் கிட்டத்தட்ட, 100 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகி வருகிறது. ஓசூர் தொழிற்சாலை நகரமாக இருந்தாலும், இங்கு நிலவும் சீர்தோஷண நிலையை வைத்து, மக்கள் பலர் நிலங்களை வாங்கினர். வீடுகளை கட்டி குடியேறினர். கர்நாடகா மாநிலத்தில் வேலை செய்பவர்கள் கூட, அங்கு வசிக்க உகந்த காலநிலை இல்லாததால், ஓசூர் பகுதியில் குடியேறியுள்ளனர். அப்படிப்பட்ட நிலையில், ஓசூரின் காலநிலை மாற்றம் மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. வெயிலின் தாக்கம் தான் கடுமையாக இருக்கிறது என்றால், கடும் வறட்சி காரணமாக நிலத்தடி நீர்மட்டம், 1,200 அடிக்கு கீழ் சென்று விட்டது. குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. ஓசூரின் காலநிலை மாற்றத்திற்கு அதன் பசுமை அழிக்கப்பட்டதும் ஒரு காரணம் என, சமூக ஆர்வலர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது. வளர்ந்து வரும் தொழில் நகரான ஓசூரின் போக்குவரத்து தேவையை கருத்தி கொண்டு, ஓசூர் - தளி சாலை, ஓசூர் இ.எஸ்.ஐ., ரிங்ரோடு, மத்திகிரி - டி.வி.எஸ்., கம்பெனி சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. இதுதவிர, கர்நாடகா - தமிழகத்தை இணைக்கும் வகையில், சான்டிலைட் டவுன் ரிங்ரோடு, தர்மபுரியில் இருந்து ராயக்கோட்டை, ஓசூர் வழியாக, கர்நாடகா மாநிலம் நெரலுார் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடக்கின்றன. இதற்காக, சாலையோரம் மற்றும் ஓசூர் நகரில் பல ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. இதனால், ஓசூர் நகரம் பசுமையை இழந்து தவிக்கிறது. இதுமட்டுமின்றி, ஓசூரை சுற்றியுள்ள மலைகள் கனிமவளத்திற்காக வெட்டப்பட்டு, கர்நாடகா மாநிலத்திற்கு கடத்தப்பட்டுள்ளன. மேலும், தொழிற்சாலைகள் பெருக்கம் போன்ற காரணங்களால், ஓசூர் தனது வழக்கமான காலநிலையை இழந்து வருகிறது. மரங்கள் அடர்த்தி குறைந்து விட்டதால், காற்றில் இருக்கும் ஈரப்பதம் கூட தற்போது இல்லை. அதனால் தான் நடப்பாண்டு வெப்பத்தின் தாக்கம் மக்களை வாட்டி எடுக்கிறது.இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறும் போது, 'இன்னும் சில ஆண்டுகளில் ஓசூர் வாழ்வதற்கு தகுதி இல்லாத நகராக மாறி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. சாலையோரம் வெட்டப்படும் ஒரு மரத்திற்கு பதில், 10 மரங்களை நட வேண்டும் என்ற அரசு விதி உள்ளது. நெடுஞ்சாலைத்துறை வனத்துறைக்கு பணத்தை கட்டுகிறது. வனத்துறையும் ஆங்காங்கு தரிசு நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், வனப்பகுதிகளில் மரக்கன்றுகளை நடுகின்றன. ஆனால், அவற்றில் சொற்ப அளவில் மட்டுமே மரங்களாக வளருகின்றன. குறுகிய இடங்களில் மியாவாக்கி காடுகளை அமைக்கின்றனர். அத்திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்துவதில்லை. மரங்கள், மலைகள் அழிப்பு, தொழிற்சாலைகள் அதிகரிப்பு போன்ற காரணத்தால், காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. மழை பொய்த்து வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் சரிந்து விட்டது. இதனால் ஓசூர் தன் பொழிவை இழந்து, வெப்பத்தால் சிக்கி தவிக்கிறது' என்றனர்.