| ADDED : மார் 30, 2024 03:24 AM
ஓசூர்: ஓசூரில், ரயில்வே கேட்டில் சரக்கு ரயில் ஒரு மணி நேரம் நின்றதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தேன்கனிக்கோட்டை சாலையில், ஆர்.சி., தேவாலயம் அருகே, சாலையின் குறுக்கே உள்ள ரயில்வே பாலம் விரிவாக்கம் செய்யும் பணிகள், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நடக்கிறது. அதனால் தளி சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. தளி சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், ஓசூர் வழியாக பெங்களூரு நோக்கி நேற்று நண்பகல், 12:00 மணிக்கு சரக்கு ரயில் சென்றது.தளி ரயில்வே கேட் அருகே, தண்டவாள பாதையில் அதிகளவு கிரீஸ் போட்டதால், சரக்கு ரயில் சக்கரங்கள் சுழன்று செல்ல முடியவில்லை. அதனால் ரயில் பெட்டிகளை இன்ஜினால் முன்நோக்கி இழுக்க முடியாத நிலை உருவானது. மதியம், 1:00 மணி வரை தளி ரயில்வே கேட் பகுதியில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டது. ஏற்கனவே தளி ரயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலையில், சரக்கு ரயில் செல்லாமல் அப்படியே நின்றதால், சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணி வகுத்தன.ரயில் பின்நோக்கி இயக்கப்பட்டு, கிரீஸ் இருந்த இடம் கண்டறியப்பட்டு, அப்பகுதியில் லேசாக மணல் போடப்பட்டு, சக்கரங்கள் வழுக்காமல் சுழல ரயில்வே துறையினர் ஏற்பாடு செய்தனர். அதன் பின் ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. அதனால், ஒரு மணி நேரம் வாகன ஓட்டிகள் சுற்றிக்கொண்டு சென்று சிரமத்தை சந்தித்தனர்.