தர்மபுரி: மத்திய இடைக்கால பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்தார். இந்த இடைக்கால பட்ஜெட் சாமானிய நடுத்தர மக்கள் மற்றும் இளைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு, முன்னேற்றப்பாதையில் அழைத்துச்செல்லும் சிறப்பான பட்ஜெட் என, பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.கே.ராஜலிங்கம், 52, சமூக செயற்பாட்டாளர், திப்பம்பட்டி, தர்மபுரி: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், 3 கோடி குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது. மேலும், அடுத்த, 5 ஆண்டுகளில், 2 கோடி வீடுகள் கட்டி தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம், குடிசையில்லா இந்தியா என்ற நிலை ஏற்படும். இது, அனைத்து தரப்பு மக்களும் வரவேற்கும் செயல்.மு.பிரபு, 40, மாவட்ட செயலாளர், மணல், செங்கல், லாரி உரிமையாளர்கள் சங்கம், கடத்துார்: சூரிய ஒளி சக்தி மூலம், 300 யூனிட் இலவச மின்சாரம், மக்கள் சுமையை குறைக்கும். சூரிய ஒளி மின்சக்தி மூலம், ஒவ்வொரு வீடுகளுக்கும், 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்து, மக்களின் சுமை அதிகரித்து வரும் நிலையில், 300 யூனிட் இலவச மின்சாரம் அறிவிப்பு நடைமுறைக்கு வரும் பட்சத்தில், பெருமளவில் கிராமப்புற மக்களின் சுமை தவிர்க்கப்படும். வி.முருகேசன், 45, ரியல் எஸ்டேட், தொப்பூர்: பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து சிறந்த திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து அறிவித்து வருகிறது. விவசாயிகளின் துயர் துடைத்து வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய பட்ஜெட். இடைக்கால பட்ஜெட், உலக அரங்கில் இந்தியர்களை உயர்த்தும் நிலைக்கு கொண்டு செல்லும்.கே.ராமலிங்கம், 67, முன்னாள் தலைவர், சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்கம், கிருஷ்ணகிரி: ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க, ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த இடைக்கால பட்ஜெட், ஏழைகள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்களை முன்னேற்றும். பாதுகாப்பு நோக்கங்களுக்காக, ஆழமான தொழில்நுட்பங்களை வலுப்படுத்த, புதிய திட்டம் அறிவிக்கப்படும் என நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற பல்வேறு அறிவிப்புகள், நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. பட்ஜெட்டில், சிறு, குறுந்தொழிற்சாலைகளுக்கு, 22,138 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த பட்ஜெட்டை விட, 41.6 சதவீதம் அதிகம். இருந்தாலும் சிறு, குறுந்தொழிற்சாலைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கியிருக்கலாம்.கே.மகேஷ், 49, தலைவர், கிருஷ்ணகிரி கிரானைட் உற்பத்தியாளர்கள் சங்கம், கிருஷ்ணகிரி: பட்ஜெட்டில், சிறு குறு தொழிற்சாலைகளுக்கும் அதிகளவில் மானியத்துடன் சோலார் இணைப்புகள் கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும். முத்ரா திட்டத்தில் பல இளைஞர்கள் கடன் பெற்று, தொழில் முனைவோராக மாறியுள்ளனர். 517 நகரங்களில் சிறு விமான நிலையங்கள், தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்க, ஒரு லட்சம் கோடி புதிய நிதியம் அமைக்கப்படும் என்பவை வரவேற்கத் தக்கவை. இடைக்கால பட்ஜெட் பயனுள்ளதாகவே இருக்கிறது.