| ADDED : மே 30, 2024 07:11 AM
தர்மபுரி : பாலக்கோடு அடுத்த, ஜோதிஹள்ளி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பக்தர்கள் தீச்சட்டி மற்றும் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த ஜோதிஹள்ளியிலுள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. ஆண்டுதோறும் வரும் வைகாசி மாதத்தில் இக்கோவில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஒருவாரமாக நடந்து வரும் இத்திருவிழாவில் நேற்று, அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கிராம மக்கள் ஒன்றிணைந்து அம்மனுக்கு கூழ் ஊற்றியும், மாவிளக்கு மற்றும் தட்டுவரிசை எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் சிலர், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் பல்வேறு சுவாமி வேடங்கள் அணிந்தும் ஊர்வலம் வந்து பொங்கல் வைத்து வழிபட்டனர். சிலர், ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.