தர்மபுரி, 'கட்டுமான பணிகளுக்கு, மணல் வழங்கும் நடைமுறையை ஆய்வு செய்ய வேண்டும். இல்லையெனில், தர்மபுரி மாவட்டத்திலுள்ள மலைகளும், குன்றுகளும் சில ஆண்டுகளில் எம்.சாண்ட் போன்ற தேவைகளுக்கு தரைமட்டம் ஆக்கப்பட்டு, இயற்கை சூழல் பாதிக்கும்' என, குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர்.தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ரூபன் சங்கர்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் பிரதாபன் பேசுகையில்,''கட்டுமான பணிகளுக்கு ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து மணல் வழங்கும் நடைமுறையை ஆய்வு செய்து, மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். இல்லையெனில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மலைகளும், குன்றுகளும் சில ஆண்டுகளில் எம்.சாண்ட் போன்ற தேவைகளுக்காக தரைமட்டம் ஆக்கப்பட்டு, இயற்கை சூழல் பாதிப்புக்கு உள்ளாகும்,'' என்றார்.இதைத்தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள் ராஜ்குமார், சின்னுசாமி, திருமலை உள்ளிட்டோர் பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்து பால் உற்பத்தி உள்ளது. இதை கருத்தில் கொண்டு அரசு மூலம், பால் பவுடர், பிஸ்கட் உள்ளிட்ட பாலை மதிப்பு கூட்டு பொருட்களாக மாற்றம் செய்யும் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். இண்டூரில் சிறுதானிய கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.தென்பெண்ணையாற்றின் குறுக்கே, மொரப்பூர் அடுத்த எம்.வெளாம்பட்டி அருகே செனாக்கல் என்ற இடத்தில் தடுப்பணை கட்டி, 16க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கும் திட்டம் உள்ளிட்ட, தர்மபுரி மாவட்டத்தில் கிடப்பில் உள்ள நீர்ப்பாசன திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும். சின்னாறு (பஞ்சப்பள்ளி)அணையில் இருந்து, தும்பலஅள்ளி அணைக்கு கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வர வேண்டும். மிட்டாரெட்டிஅள்ளி அடுத்த கோம்பேரி கோம்பை வழியாக, பொம்மிடிக்கு விரைந்து சாலை அமைக்க வேண்டும். முத்தரப்பு கூட்டம் நடத்தி மரவள்ளி கிழங்குக்கு ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.மணி அடிக்கப்படும்இனி வரும் காலங்களில் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குறிப்பிட்ட நேரத்தை கடந்து பேசினால், அவர்கள் பேச்சை முடிக்கும் படி, மணி அடிக்கும் நடைமுறை பின்பற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள், 'மணி அடித்து பேச்சாளரை அமர வைக்க, விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒன்றும், பட்டிமன்றம் இல்லை. மாதத்துக்கு ஒருமுறை தான், குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. அதிலும் நேரம் நிர்ணயம் செய்வது ஏற்க கூடியதல்ல' என தெரிவித்தனர்.