உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வனத்துறை குறைதீர் கூட்டம் ஆர்வம் காட்டாத விவசாயிகள்

வனத்துறை குறைதீர் கூட்டம் ஆர்வம் காட்டாத விவசாயிகள்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், வனத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ரேஞ்ஜர் முருகேசன் தலைமையில், மாவட்ட வன அலுவலகத்தில் நடந்தது. இதில், உதவி வன பாதுகாவலர்கள் வின்சென்ட், சரவணன் கலந்து கொண்டனர்.கடந்த மாதம் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது, 11:00 மணிக்கு கூட்டம் தொடங்குவதாக அறிவித்து, 3 மணி நேரம் விவசாயிகளை காக்க வைத்த பிறகு கூட்டத்தை வனத்துறை அதிகாரிகள் நடத்தினர்.இதனால், கோபமடைந்த விவசாயிகள், அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். அதேபோல், நேற்றும் சாவகாசமாக, 12:00 மணிக்கு கூட்டத்தை அதிகாரிகள் தொடங்கினர். இதனால், 15க்கும் குறைவான விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில், வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களில் மயில், காட்டுப்பன்றி, குரங்கு, யானை உள்ளிட்டவை விவசாய பயிர்களை நாசம் செய்வதால், அவற்றை விரட்டும் கருவிகள் காட்சி படுத்தப்பட்டது. இதில், சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கல்லுாரி பேராசிரியர்கள் ராம்குமார், அருள்முருகன், வனவிலங்குகளை விரட்டும் கருவிகளின் செயல்பாடுகள் குறித்து, விளக்கம் அளித்தனர். மேலும், 3,000 முதல், 5,500 ரூபாய் வரையுள்ள கருவிகளை விவசாயிகள் வாங்கி பயன்படுத்தி, வனவிலங்குகளை எளிதில் விரட்டலாம், என தெரிவித்தனர். விவசாயத்தில் லாபம் இல்லாமல் தவிக்கும் சூழலில், 5,000 ரூபாய் கொடுத்து எப்படி கருவிகளை வாங்குவது. இவற்றை, அரசு மானிய விலையில் கொடுத்தால் பயன்படுத்தலாம், எதுவும் இல்லாமல் எப்படி வாங்குவது, என புலம்பியபடி விவசாயிகள் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ