உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆக்கிரமிப்பு இடத்தில் சொகுசு பங்களா : கொடைக்கானல் நகராட்சி தலைவர் மீது புகார்

ஆக்கிரமிப்பு இடத்தில் சொகுசு பங்களா : கொடைக்கானல் நகராட்சி தலைவர் மீது புகார்

கொடைக்கானல் : நில அபகரிப்பு புகாரில் சிக்கியுள்ள கொடைக்கானல் நகராட்சி தலைவர் முகமது இப்ராகிம் (தி.மு.க.,) மீது, மேலும் ஒரு அபகரிப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனியார் இடத்தை ஆக்கிரமித்தும், மலைப்பகுதி நகரமைப்பு விதியை மீறியும் பங்களா கட்டி வருதாக, ஒய்வு பெற்ற அரசு ஊழியர் விக்டர் சிகாமணி (73) புகார் தெரிவித்துள்ளார். இங்குள்ள ஜான் ரோஷன் என்பவரது நிலத்தை அபகரிக்க உடந்தையாக செயல்பட்ட முகமது இப்ராகிம், கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் உள்ளார். இவர் மீது அடுத்தடுத்து புகார்கள் எழுந்துள்ளன. பிலிஸ்வில்லா பகுதியை சேர்ந்த விக்டர் சிகாமணி, வானியியல் ஆராய்ச்சி மையத்தில் ஆய்வக உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். ''எனது இடத்தை ஆக்கிரமித்து, முகமது இப்ராகிம் பங்களா கட்டி வருகிறார்,'' என, அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் கூறியது: எனக்கு சொந்தமான 6 சென்ட் காலி இடம் வீட்டருகே உள்ளது. இதன் அருகே பங்களா கட்டி வரும் முகமது இப்ராகிம், 2 சென்ட் இடத்தை ஆக்கிரமித்து கொண்டார். இதில் கட்டுமான பணிகளை துவக்கிய போது, தலைமை செயலர் முதல் நகராட்சி கமிஷனர் வரை, புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ளது. மலைப்பகுதி நகரமைப்பு விதிகளின் படி, இங்கு சில பகுதிகள், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது; இதன்படி, 400 சதுர அடியில் வீடு கட்டலாம். அவர் பங்களா கட்டும் பகுதி, நலிந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டது. அதிகாரத்தால், விதிகளை திருத்தி கட்டுமான பணிகள் நடக்கின்றன. இதை தடுத்து, எனது இடத்தை மீட்டு தர வேண்டும், என்றார். இதுகுறித்து நகராட்சி கமிஷனர் ராஜன் கூறுகையில், ''அந்த இடம் குறித்து கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால், கட்டட அனுமதி வழங்கப்படவில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை