சின்னாளபட்டி : சின்னாளபட்டி பாரதி நகர், சத்யா நகர் பகுதிகளில் பராமரிப்பற்றசாக்கடை, சுகாதார வளாகம், தொற்று பரப்பும் குடிநீர் தொட்டி உள்ளிட்ட பிரச்னைகளால் சுகாதாரக்கேடு அதிகரித்து வருகிறது.பேரூராட்சியின் 13வது வார்டில் வடக்கு 1 முதல் 4 தெருக்கள், பாரதி நகர், சத்யா நகர், தம்பித்தோட்டம் முதல் தெரு உள்ளன. போதிய சுகாதாரமற்ற சூழலில் இப்பகுதியினர் வசிக்கின்றனர். தம்பித்தோட்டம் அரசு சமுதாய நல மையத்திற்கு செல்லும் வழியில் பொது சுகாதாரம் மோசமான நிலையில் உள்ளது. தினமும் 400க்கு மேற்பட்டோர் இங்கு வந்து செல்கின்றனர். சாக்கடை சரிவர பராமரிக்கப்படுவது இல்லை. தேங்கும் அசுத்த நீரால் கொசு, புழு, பூச்சிகளின் உற்பத்தி மையமாக மாறியுள்ளது. முதல் குறுக்கு தெருவில் ரோடு, சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. முதல் , 2வது தெருக்களில் உள்ள குடிநீர் தொட்டிகள் தொற்று பரப்பும் அபாய சூழலில் உள்ளன. தெற்கு தெருவில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே மகளிர் சுகாதார வளாகம் உள்ளது. இதனை பராமரிப்பதில் பேரூராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டுகிறது. இதனால் திறந்த வெளி பயன்பாடுகள் அதிகரித்து சுகாதாரக்கேடு சார்ந்த பிரச்னைகளால் குழந்தைகள், முதியோர், பெண்கள் பாதிப்படைவது தொடர்கிறது. சுகாதாரம் மோசம்
சுமதி, குடும்ப தலைவி, சின்னாளபட்டி : அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். சுகாதார வளாகம் பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இப்பிரச்னையால் இப்பகுதியில் திறந்த வெளி பயன்பாடு தாராளமாகி விட்டது. சாக்கடை ,வடிகால் பராமரித்து பல வாரங்களாகி விட்டது. கழிவுநீர் பல இடங்களில் தேங்கி நிற்கிறது. பகல் மட்டுமின்றி இரவு நேரங்களில் ஈ, புழு, பூச்சிகள், கொசுத்தொல்லை அதிகரிப்பால் பலர் தொற்று பிரச்னைகளால் பாதிப்படையும் அவலம் நீடிக்கிறது. தனியார் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. பராமரிப்பற்ற தொட்டி
பஞ்சவர்ணம், குடும்பத்தலைவி, சின்னாளபட்டி : திடக்கழிவு மேலாண்மைக்காக கழிவுகளை தரம் பிரித்து உரத்தயாரிப்பிற்கு அனுப்புவதில் பின்னடைவு நீடிக்கிறது. கண்ட இடங்களில் பாலிதீன் கழிவுகளை குவித்து எரிக்கின்றனர். சாக்கடையில் கழிவுகள் மேவிய நிலையில் தவளை ,எலி ஆகியவற்றை விரட்டி வரும் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் குடியிருப்புகளுக்குள் புகுவது வாடிக்கையாகிவிட்டது. சிறுமின்விசை தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கல் நடந்தது. இதனை சுத்தமாக பராமரிப்பதே கிடையாது. இதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.