| ADDED : மே 30, 2024 04:17 AM
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நகராட்சியால் சின்னகுளத்தை துார்வாரி கரைபகுதிகளில் பேவர் பிளாக் கற்கள் அமைத்து நடை பாதை அமைத்தும் பயன்பாட்டிற்கு வராது சிதிலமடைந்து உள்ளதோடு, அகற்றப்படாத ஆகாயத்தாமரைகள், தண்ணீர் மறுகால் செல்லும் கால்வாய் தெரியாதபடி ஆக்கிரமிப்புகள் என தீர்க்க முடியாத பிரச்னைகளின் பிடியில் சிக்கி தவிக்கிறது சின்ன குளம் கண்மாய் .ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில்அமைந்துள்ளது சின்ன குளம். பல ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒட்டன்சத்திரம் மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் ஓடை வழியாக குளத்தை அடைந்து துாய நீராக இருந்து வந்தது. நாளடைவில் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பில் சுருங்கிப் போனது. இந்த ஓடையானது தற்போது சாக்கடையாக மாறி ஒட்டன்சத்திரம் நகரின் ஒட்டு மொத்த கழுவு நீரும் இந்த குளத்தில்தான் கலக்கிறது. இதன் காரணமாக ஒட்டன்சத்திரம் நகரின் 'கூவமாக' சின்னகுளம் மாறிவிட்டது. 25 ஏக்கரில் குளம் இருந்தாலும் தற்போது ஆக்கிரமிப்பால் சுருங்கி காணப்படுகிறது. ஆக்கிரமிப்பை சரிவர அகற்றாமல் வேலி அமைத்து கரைகளில் நகர மக்களின் வசதிக்காக பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு நடை பாதை அமைக்கப்பட்டது. ஆனால் பணிகள் முடிந்தும் பயன்பாட்டிற்கு வராததால் இத்திட்டத்தின் மூலம் குளத்தின் கரைகளில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் கற்களில் புல் பூண்டுகள் முளைத்து வீணாகி வருகிறது. தண்ணீர் மறுகால் செல்லும் கால்வாய் முற்றிலும் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. செடி கொடிகள் முளைத்து கால்வாய் இருக்கும் இடமே தெரியாத அளவு மறைக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.குளத்தின் கரையை ஒட்டி செல்லும் ரோட்டில் கோழி, இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம்
நல்லுசாமி, விவசாயி: சின்ன குளத்தில் முளைத்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். குளம் யொட்டி பூங்கா அமைக்க இடம் ஒதுக்கப்பட்டது.ஆனால் இதுவரை அமைக்கப்படவில்லை. குளத்தை ஒட்டி செல்லும் ரோட்டில் கோழி, இறைச்சி கழிவுகளை மூடை, மூடையாக கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதியை கடந்து செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது. இறைச்சி கழிவுகளை உண்பதற்கு வரும் நாய்களால் தொல்லை ஏற்படுகிறது. இப்பகுதியில் கழிவுகளை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவு நீரை சுத்திகரிக்க வேண்டும்
ராஜேந்திரன், நீரினை பயன்படுத்துவோர் சங்க கூட்டமைப்பு சங்க செயலாளர்: சின்ன குளத்தில் கழிவு நீர் கலப்பதால் நிறம் மாறி காணப்படுகிறது. சின்ன குளத்து நீரை பயன்படுத்துவதற்கு ஏதுவாக சுத்திகரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் கரைகளில் பேவர் பிளாக் கற்களை பதித்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற பல முறை கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் கற்கள் பல இடங்களில் சிதிலமடைந்துள்ளது. இதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். குளம் மறுகால் செல்லும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்.