| ADDED : ஜூன் 02, 2024 02:34 AM
கொடைக்கானல்:கொடைக்கானலில் நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க சுற்றுலா பயணியர் குவிந்தனர்.தொடர்மழை பெய்ததால், குளு குளு நகரான கொடைக்கானல் நேற்று சில்லிட்டது; ஏராளமான பயணியர் முகாமிட்டனர். காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு மதியம், 1:00 மணி நேரம் மிதமான மழை பெய்தது. இங்குள்ள கோக்கர்ஸ் வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி, மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வனச்சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணியர் பார்த்து ரசித்தனர். ஏரி சாலையில் குதிரை, சைக்கிள், ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். மழைக்கிடையே பிரையன்ட் பூங்காவில் பூத்துள்ள மலர்களை குடை பிடித்தபடி பார்வையிட்டனர். அவ்வப்போது தரையிரங்கிய மேகக் கூட்டத்தையும் ரசித்தனர். ஏராளமான வாகனங்கள் வருகை வந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.