| ADDED : பிப் 17, 2024 02:00 AM
தேவதானப்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் இருந்து, 'கோடை எக்ஸ்பிரஸ்' என்ற பெயரிலான தனியார் பஸ்சை, தாண்டிக்குடியைச் சேர்ந்த இளங்கோவன், 32, கொடைக்கானலுக்கு நேற்று காலை 9:30 மணிக்கு ஓட்டி சென்று கொண்டிருந்தார். பஸ்சில் 54 பயணியர் இருந்தனர்.கொடைக்கானல் அடிவாரம் டம்டம் பாறை ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில், பஸ் சென்ற போது, கொடைக்கானலில் இருந்து வத்தல குண்டு நோக்கி சென்ற டிப்பர் லாரி, பஸ்சில் மோதியது. இதில் நிலை தடுமாறிய பஸ், ரோட்டோரம் தடுப்புக் கல்லில் மோதியது.டிரைவர் இளங்கோவன் சாமர்த்தியத்தால் 200 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்வது தடுக்கப்பட்டது. அதே நேரத்தில், முன்புறம் உட்கார்ந்திருந்த பெரியகுளத்தைச் சேர்ந்த சிரில் ராஜ்குமார் மனைவி நித்யா, 32, முன்புறம் கண்ணாடியை உடைத்து 200 அடி பள்ளத்தில் விழுந்து படுகாயமடைந்தார்.தகவல் அறிந்து வந்த வத்தலக்குண்டு தீயணைப்பு அலுவலர் ஜோசப் தலைமையிலான வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி நித்யாவை மீட்டனர். அவர் சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு துாக்கி செல்லப்பட்டார்.காயமடைந்த பஸ் டிரைவர், மதுரை அழகப்பா நகரைச் சேர்ந்த ராமர், 77, வத்தலகுண்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்; மற்றவர்கள் காயமின்றி தப்பினர். விபத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தப்பியோடிய டிப்பர் லாரி டிரைவரை தேவதானப்பட்டி போலீசார் தேடுகின்றனர்.