| ADDED : பிப் 15, 2024 06:02 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் காதலர் தினத்தை முன்னிட்டு கோயில்கள், பூங்காக்கள் பொழுது போக்கிடங்களில் காதலர்கள் , புதுமண தம்பதிகள் படையெடுத்தனர்.காதலை கொண்டாடும் வகையில் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர்கள் ஒருவருக்கொருவர் ரோஜா, பரிசு பொருட்களை வழங்கி அன்பை வெளிப்படுத்தினர். புதுமண காதல் தம்பதிகளும் ஒருவருக்கொருவர் பரிசுகள் வழங்கினர். காதலர் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படலாம் என்ற அச்சத்தினால் திண்டுக்கல் மலைக்கோட்டைக்கு நேற்று காதலர்கள் ஜோடியாக வரவில்லை. அதேநேரம் திருமணமான காதல் ஜோடிகள், மலைக்கோட்டை சென்று காதலர் தினத்தை கொண்டாடினர்.காதலித்து திருமணம் செய்தவர்கள் குடும்பத்தோடு கோயில்கள் , பூங்காக்களுக்கு சென்றனர். மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள குமரன் பூங்காவில் நேற்று காலை முதலே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதால் காதலர்கள் வரவில்லை . திருமணமான தம்பதிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் விலை உயர்ந்த ரோஜாப்பூ
காதலர் தினத்தில் ரோஜா மலர்கள் முதலிடம் பிடிக்கும் நிலையில் திண்டுக்கல்லில் நேற்று இதன் விலை இரு மடங்கு உயர்ந்து . ஒரு ரோஜாப்பூ ரூ.30 முதல் ரூ.50 வரையில் விற்பனையானது.அண்ணா பூ வணிக வளாகத்தில் மல்லிகைப்பூ ரூ.1300, முல்லை ரூ.1200, ஜாதிப்பூ ரூ.700, கனகாம்பரம் ரூ.350, அரளி ரூ.150, சம்பங்கி ரூ.50, கோழிக்கொண்டை ரூ.35-க்கு விற்பனையானது.