உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உயிருக்கு ஊறு விளைவிக்கும் மட்டன் கடைகள்

உயிருக்கு ஊறு விளைவிக்கும் மட்டன் கடைகள்

அந்தியூர்: அந்தியூரில் உள்ள மட்டன் கடைகள் அனைத்தும், நகரில் பன்றிகள் சங்கமிக்கும் தவிட்டுப்பாளையம் பாலம் அருகே பஞ்சாயத்து நிர்வாகத்தால் இடமாற்றப்பட்டுள்ளன. அந்தியூர், சத்தி ரோட்டில் டவுன் பஞ்சாயத்துக்கு சொந்தமான இடத்தில், பத்துக்கும் மேற்பட்ட மட்டன், சிக்கன் கடைகள் இயங்குகின்றன. இதுதவிர, தவிட்டுப்பாளையம் பிரம்மதேசம் ரோட்டிலும் மூன்று மட்டன் கடைகள் இயங்கி வந்தன. தவிட்டுப்பாளையத்தில் ஒன்பது லட்சம் ரூபாய் செலவில், மூன்று ரேஷன் கடைகள் அமைக்க டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் முடிவு செய்தது. ஒரு வாரத்துக்கு முன், இவ்விடத்தில் இயங்கி வந்த மூன்று மட்டன் கடைகளும் உடனடியாக காலி செய்யப்பட்டன. அங்கு அந்தியூர் எம்.எல்.ஏ., ரமணிதரன், டவுன் பஞ்சாயத்து தலைவர் மீனாட்சி சுந்தரம் ஆகியோரால், ரேஷன் கடை கட்ட பூமி பூஜை செய்யப்பட்டது. காலி செய்யப்பட்ட மட்டன் கடைகள், நகரின் பன்றிகளின் சங்கமமாக உள்ள அந்தியூர் - தவிட்டுப்பாளையம் இணைப்பு பாலம் அருகேயுள்ள சாக்கடையோரத்துக்கு, இடமாற்றப்பட்டன. சாக்கடையாக மட்டுமல்லாமல், நோயின் இருப்பிடமாகவும் இப்பகுதி திகழ்கிறது. சாக்கடையில் தேங்கியுள்ள கழிவுநீரில் பன்றிகளும் தன் பங்குக்கு ஆட்டம் போட்டு நோயை பரப்புகின்றன. கடந்தாட்சியில் இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, தேங்கியிருந்த கழிவுநீரை வெளியேற்றியும், அடர்ந்த நாணல் தண்டுகளை அகற்றியும் முயற்சி மேற்கொண்டது. பெயரளவில் செய்யப்பட்ட தூர்வாரும் பணியால், இக்குறை தீரவில்லை. அதுமட்டுமின்றி, இப்பகுதி திறந்த வெளி கழிப்பிடமாகவும் உள்ளதால், ஈக்கள் தொல்லை அதிகம். இங்கு துவக்கப்பட்டுள்ள மட்டன் கடைகளில் விற்பனை செய்யப்படும் இறைச்சியால், பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாய நிலை உருவாகியுள்ளது. ரேஷன் கடை அமைக்க, இறைச்சி கடையை இடமாற்றிய டவுன் பஞ்சாயத்து நிர்வாகம், ஈக்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பெரும் பிரச்னையை தடுக்க, முன்னுரிமை கொடுக்க வேண்டாமா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை