| ADDED : மே 08, 2024 02:25 AM
பவானி:சித்தோடு அருகே, 500 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை ஏற்றிவந்த வாகனம், சூறாவளி காற்றால் விபத்தில் சிக்கியது.கோவையில் இருந்து, 810 கிலோ தங்க நகைகள் ஏற்றிய வாகனம், நேற்று முன்தினம் அதிகாலை, சேலம் நோக்கி புறப்பட்டது.ஈரோடு
மாவட்டம் சித்தோடு அருகே சமத்துவபுரம் மேடு பகுதியில் வந்தபோது,
பலத்த சூறாவளி காற்று வீசியது. அப்போது வேனின் முன்னால் சென்ற லாரியின்
தார்பாய் கழன்று, காற்றில் பறந்து வந்து, தங்கம் ஏற்றி வந்த வேனின்
முன்பகுதியை மூடிக்கொண்டது. இதனால் சாலை தெரியாத நிலையில்,
கட்டுப்பாட்டை இழந்து இடதுபுற பக்கவாட்டில் கவிழ்ந்தது.வேன்
டிரைவரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த சசிக்குமார்,30; ஊட்டியை சேர்ந்த பாதுகாவலர் பால்ராஜ், 40, காயமடைந்தனர்.
தகவலறிந்து தங்க நகை நிறுவனத்தினர் மற்றும் போலீசார் வந்தனர்.
காயமடைந்தவர்களை மீட்டு, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தனர். மீட்பு வாகன உதவியுடன் வேனை மீட்டு, சித்தோடு
போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆவணங்களை சரிபார்த்து
மாற்று வாகனம் வரவழைக்கப்பட்டு நகைகள் அனுப்பி வைக்கப்பட்டன. வேனில்
கொண்டு வரப்பட்ட நகைகளின் மதிப்பு, 500 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும்.
நகைகள் கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக வேன்
என்பதால், நகைகள் சேதாரம் அடையவில்லை என்று, போலீசார் தெரிவித்தனர்.