புன்செய் புளியம்பட்டி, பவானிசாகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம் தலைமையில் பஞ்., தலைவர்கள் நல்லூர் மூர்த்தி, விண்ணப்பள்ளி ஜெயமணி, ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பாலன், முன்னாள் யூனியன் சேர்மன் பழனிச்சாமி மற்றும் வீடு கட்டும் திட்ட பயனாளிகள், மக்கள் என நுாற்றுக்கும் மேற்பட்டோர், புன்செய்புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று வந்தனர். எஸ்.ஐ., கார்த்திக்கிடம் தனித்தனியாக புகார் மனு வழங்கினர்.ஊராட்சி தலைவர்கள் அளித்த மனுக்களில், 'பவானிசாகர் யூனியன் ஊராட்சி பகுதிகளில், புதிய வீட்டுமனை அப்ரூவல் செய்வதற்கு, ௫,௦௦௦ ரூபாய் கேட்பதாக ஊராட்சி நிர்வாகத்தின் மீது, விண்ணப்பள்ளி, சாணார்பதியை சேர்ந்த சந்தோஷ், தவறான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.கலைஞர் கனவு இல்லம் திட்ட பயனாளிகள், 32 பேர் அளித்த மனுவில், 'விண்ணப்பள்ளி ஊராட்சி சுந்தராபுரம் பகுதியில் குடிசை வீட்டில் வசிக்கும் எங்களை பயனாளிகளாக தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால், சந்தோஷ் என்பவர், ஒரே பகுதியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடு வழங்கக் கூடாது என்று தவறான நோக்கத்தில் கலெக்டர், வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியுள்ளார். இதனால் நாங்கள் வீடு கட்ட முடியாமல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.புன்செய்புளியம்பட்டி சார்-பதிவாளர் ஐஸ்வர்யா அளித்த மனுவில், 'சட்ட முத்திரை என்ற பத்திரிகையை பயன்படுத்தி சந்தோஷ் என்பவர், புகைப்படத்தை போலியாக சித்தரித்து சார்-பதிவாளர் அலுவலகம் குறித்து தவறான தகவல்களை, சமூக வலைத்தளங்களில் பரப்புகிறார்' என்று தெரிவித்துள்ளார்.அதேபோல் சாணார்பதியை சேர்ந்த சந்தோஷ் அளித்த மனுவில், 'நான் வீட்டில் இல்லாத சமயத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம் உள்ளிட்ட, 60 பேர் வந்து பெற்றோரிடம் மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார். இருதரப்பு புகார் குறித்து புன்செய்புளியம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.