| ADDED : மே 22, 2024 06:25 AM
திருப்பூர்: பள்ளி கல்வி செயலர் உத்தரவையடுத்து, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தங்கள் பள்ளியிலேயே ஆதார் எண் பெறுவதற்கு, புதிய பதிவு மற்றும் ஆதார் எண் புதுப்பிப்பு தொடர்பாக பணி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.இதற்கான வழிகாட்டுதல்களும் மாவட்ட கல்வி அதிகாரிகள் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. அத்துடன், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடம், பள்ளிக்கல்வித்துறை பதிவாளர் பதிவு செய்து, 'எல்காட்' நிறுவனத்துக்கு இணைந்து, ஆதார் பதிவு கருவி கொள்முதல் செய்து பணிகளும் ஒப்படைக்கப்பட்டது. மாணவர்களுக்கு 'பயோமெட்ரிக்' கட்டாய பதிவு, கட்டாய புதுப்பித்தல் உள்ளிட்ட பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.ஆனால், மாவட்டத்தில் பெரும்பாலான அதிக மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் கூட ஆதார் பதிவு முறையாக நடப்பதில்லை. இதனால், தபால் நிலையம், கம்ப்யூட்டர் சென்டர், தாலுகா அலுவலகத்தில் இ சேவை மையங்களில் கால்கடுக்க காத்திருக்கின்றனர். இரண்டு முதல் மூன்று நாள் அலைந்து ஆதார் 'அப்டேட்' செய்கின்றனர்.இது விஷயத்தில் முதன்மை கல்வி அலுவலர் தலையிட்டு, அனைத்து மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளிலும் ஆதார் கார்டு, புதுப்பிப்பு பணி மேற்கொள்வது குறித்து அறிவிப்பை பெற்றோர் களுக்கு தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்க அறிவுறுத்த வேண்டும். பள்ளிகளில் அறிவிப்பாகவும் வெளியிட வேண்டும்.