ஈரோடு: ஈரோடு லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார், மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று ஓட்டு சேகரித்தார்.மொடக்குறிச்சி தொகுதி செட்டிபாளையம், பச்சப்பாளி, லக்காபுரம், சின்னியம்பாளையம், கோவிந்த நாயக்கன்பாளையம், மொடக்குறிச்சி, வேலம்பாளையம், கணபதிபாளையம், வெப்பிலி, எழுமாத்துார், குலவிளக்கு ராட்டை சுற்றிபாளையம் உட்பட, 40க்கும் மேற்பட்ட கிராமப்பகுதியில் ஓட்டு சேகரித்தார். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட மொடக்குறிச்சி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் தொழில் கூடங்கள் அமைக்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலான திட்டங்கள் கொண்டு வரவும் முயற்சி மேற்கொள்வேன். இப்பகுதியில் ஒரு தொழில் கல்லுாரி அமைக்க முயல்வேன். இத்தொகுதி ஒரு தாலுகாவாக உயர்த்தப்பட்டாலும், பெரிய அளவிலான அரசு மருத்துவமனை, 24 மணி நேரமும் மருத்துவ சிகிச்சை வழங்கும் வசதிகள், போதி எண்ணிக்கையில் டாக்டர்கள் போன்றோர் நியமிக்க முயற்சி செய்வேன்.இப்பகுதி முற்றிலும் விவசாயம் சார்ந்த பகுதி. விவசாயிகள் பயன் பெறும் வகையில் விளை பொருட்கள் பதப்படுத்த வசதியாக குளிர் சாதன வசதியுடன் கூடிய குடோன்கள், விளை பொருட்கள் விற்பனை மையம் கூடுதலாக ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கிராமப்புற அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், கூடுதல் கட்டடம், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்படும். குடிநீர் பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்படும். இவ்வாறு பேசினார்.அவருடன் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம்.பி., செல்வகுமார சின்னையன், முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணி உட்பட கூட்டணி கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.