உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வரலட்சுமி விரதமும் சேர்ந்ததால் களை கட்டிய ஆடி கடைசி வெள்ளி வழிபாடு

வரலட்சுமி விரதமும் சேர்ந்ததால் களை கட்டிய ஆடி கடைசி வெள்ளி வழிபாடு

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று, வரலட்சுமி விரதமும் வந்ததால், ஆயிரக்கணக்கான பெண்கள் குவிந்ததால், அம்மன் கோவில்கள் களை கட்டின. அம்மனுக்கு உகந்த நாளான ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை, தீர்த்தக்குட ஊர்வலம், பாலபிேஷகம் என பல்வேறு வழிபாடு நடத்தப்படுகிறது. இதன்படி ஆடி கடைசி வெள்ளியான நேற்று, அனைத்து அம்மன் கோவிலிலும் பெண் பக்தர்கள் குவிந்தனர். இதனால் கோவில்கள் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.இதன்படி ஈரோடு பெரிய மாரியம்மன் சந்தனக்காப்பு அலங்காரம், வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கருமாரியம்மன் அலங்காரம், எல்லை மாரியம்மன் வரலட்சுமி அலங்காரம், பழைய ரயில்வே ஸ்டேஷன் சாலை காந்திபுரம் மாரியம்மன் மகாலட்சுமி அலங்காரத்திலும் காட்சியளித்தனர். சின்ன மாரியம்மன் சிறப்பு அலங்காரத்திலும், அசோகபுரம் மலை மாரியம்மன் புடவை அலங்காரத்திலும் அருள்பாலித்தனர்.கோவில்களில் பெண் பக்தர்கள் அகல் விளக்கு ஏற்றியும், மஞ்சள், குங்குமம், பூ, பழம் வழங்கி வழிபட்டனர். பல கோவிலில் கம்மங்கூழ், மஞ்சள் கயிறு, வெற்றிலை, பாக்கு, வளையல், சந்தனம் பிரசாதமாக வழங்கினர். அத்துடன் நேற்று வரலட்சுமி விரதமும் கடைபிடிக்கப்பட்டது. இதனால் வீடுகளில் வரலட்சுமி விரதம் கடைபிடித்து பூஜை செய்தவர்கள், பிற பெண்கள், உறவினர்களுக்கு பூஜையில் வைக்கப்பட்ட வளையல், குங்குமம், பூ, தாலிக்கயிறு போன்றவற்றை பிரசாதமாக வழங்கினர். இதனால் அனைத்து அம்மன் கோவிலிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து பெண் பக்தர்கள் தரிசனம் செய்தனர். * கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், 60 அடி நீள குண்டத்தில், பெண் பக்தர்கள் தீபமேற்றி வழிபட்டனர். கோபி சாரதா மாரியம்மன், மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில், கலிங்கியம் கரியகாளியம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.* சென்னிமலை அருகே ஈங்கூர் தம்பிராட்டியம்மன் கோவிலில், ஆடி கடைசி வெள்ளி மற்றும் வரலட்சுமி விரதத்தை ஒட்டி திருவிளக்கு பூஜை நடந்தது. சென்னிமலை முருகன் கோவில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சார்யர் சங்கல்பம் செய்து, 108 திருவிளக்கு போற்றி மந்திரங்கள், 1,008 நாமாவளி அர்ச்சனை, 108 தமிழ் அர்ச்சனை மந்திரங்கள் கூறி திருவிளக்கு பூஜையை வழி நடத்தினர். * அந்தியூர் பத்ரகாளியம்மன், அங்காளம்மன், தவிட்டுப்பாளையம் சவுடேஸ்வரியம்மன் மற்றும் சுற்று வட்டார பகுதி அம்மன் கோவில்களில், ஆடி வெள்ளிக்கிழமை கடைசி வழிபாடு களை கட்டியது.-நிருபர்கள் குழு-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி