UPDATED : ஆக 22, 2024 02:55 PM | ADDED : ஆக 22, 2024 01:21 AM
ஈரோடு: ஈரோட்டில், ராகவேந்திர சுவாமிகளின், 353வது ஆண்டு ஆராதனையை முன்னிட்டு, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஈரோடு ராத்திரி சத்திரத்தில், பேஜாவர் மடம் அமைந்துள்ளது. இங்கு ராகவேந்திர சுவாமியின், 353வது ஆண்டு ஆராதனை மஹோத்சவ விழா நேற்று நடந்தது. காலை, 6:00 மணிக்கு நிர்மால்ய விசர்ஜனம், தொடர்ந்து பஞ்சாமிர்த அபிஷேகம், கனகாபிஷேகம் நடந்தது. மதியம் தீபாராதனை காட்டிய பிறகு, தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. மேட்டூர் சகோதரர்களின் இன்னிசை கச்சேரி நடந்தது. மாலை 5:30 மணிக்கு ஹரி நாம சங்கீர்த்தனை நடந்தது.இதேபோன்று ஈரோடு பாதராஜ மடத்தில், ராகவேந்திர சுவாமி ஆராதனை மஹோத்சவ விழா, நேற்று முன்தினம் கணபதி, தன்வந்திரி ஹோமத்துடன் தொடங்கியது. நேற்று ராகவேந்திர சுவாமி ஸ்தோத்திர ஹோமம், பார்வதி ஸ்வயம் வர ஹோமம் நடந்தது. அதன்பின், துலாபார உற்சவமும், பாதராஜ பஜனா மண்டலி குழுவினரின் பக்தி இசை கச்சேரியும் நடந்தது. ராகவேந்திரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஈரோடு காவிரிக்கரையில் உள்ள ராகவேந்திர சுவாமி, ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில், ஆராதனை விழாவை முன்னிட்டு, நேற்று காலை 8:00 மணிக்கு பல்லக்கு ரத உற்சவங்கள், 9:00 மணிக்கு சிறப்பு அலங்காரம், மதியம் தீபாராதனை காட்டப்பட்டது. பின் அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது.