ஈரோடு: வரத்து குறைவு, தேவை அதிகரிப்பால் கொப்பரை தேங்காய் விலை கிலோ, 100 ரூபாயை கடந்து விற்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதுபற்றி விவசாயிகள் கூறியதாவது: ஈரோடு, திருப்பூர், கோவை, திண்டுக்கல், தேனி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி உட்பட சில மாவட்டங்களில் மிக அதிக அளவில் தேங்காய் விளைச்சலும், கொப்பரை தேங்காய் உற்பத்தியும் நடக்கிறது. ஏப்., முதல் செப்., வரை சீசன் காலமாகும். பொதுவாக இம்மாதங்களில் தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் வரத்து அதிகமாகி, விலை சராசரியாக இருக்கும். இந்தாண்டு கடந்த ஒரு வாரமாக எழுமாத்துார், பெருந்துறை, வெள்ளகோவில், காங்கேயம் பகுதி ஒழுங்கு முறை விற்பனை கூடம், சொசைட்டிகளில் கிலோ, 100 முதல், 101.60 ரூபாய் வரை விற்பனையானது.குறிப்பாக வடமாநிலங்களுக்கு அதிக அளவில் தேங்காய் கொண்டு செல்லப்படுவதும், தமிழகத்தில் பரவலாக மழை பெய்வதால் கொப்பரை தேங்காய் உற்பத்தி குறைந்திருப்பதும் முக்கிய காரணமாகும். தவிர எண்ணெய், உணவு, மருத்துவ பயன்பாட்டுக்கு கொப்பரை தேங்காயின் தேவை அதிகரித்துள்ளதால், விலை உயர்ந்துள்ளது.கடந்தாண்டு இதே மாதம், 112 ரூபாய்க்கு கொப்பரை தேங்காய் விற்பனையானது. அதன்பின் கடந்த மார்ச் - ஏப்., மாதம் ஓரிரு நாட்கள், 105 ரூபாய் வரை விலை உயர்ந்து உடனடியாக விலை குறைந்தது. தற்போது மீண்டும் உயர்ந்து, தென்னை விவசாயிகளுக்கு நம்பிக்கை தந்துள்ளது. இவ்வாறு கூறினர்.