கோபி:தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்காலின், முதல் போக சாகுபடிக்காக, நேற்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் தடுக்கப்பட்டு, தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்கால் வழியே, 24,504 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.இரு பாசனங்களுக்கும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நேற்று காலை 9:45 மணிக்கு, முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தடப்பள்ளி வாய்க்காலில், 300 கன அடி, அரக்கன்கோட்டை வாய்க்காலில், 200 கன அடி திறக்கப்பட்டது.வரும் நாட்களில் நீர் திறப்பு படிப்படியாக உயர்த்தப்படும். நவ., 8 வரை, 120 நாட்களுக்கு நீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிகழ்வில் கோபி நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் கல்பனா, எம்.பி., அந்தியூர் செல்வராஜ், தி.மு.க., மாவட்ட செயலர் நல்லசிவம், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன சங்க தலைவர் சுபிதளபதி உட்பட பலர் பங்கேற்றனர்.தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனங்களுக்கு, நீர் திறப்பு நிகழ்வில் இதுவரையில், ஆளுங்கட்சி பிரமுகர்கள், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மட்டுமே அதிகம் பங்கேற்றுள்ளனர். கோபி ஆர்.டி.ஓ., அல்லது சப்-கலெக்டர் அந்தஸ்தில் வருவாய் துறை அதிகாரிகள் பங்கேற்றதில்லை.நேற்று நடந்த நிகழ்வில், கோபி ஆர்.டி.ஓ., கண்ணப்பன், கோபி தாசில்தார் கார்த்திக் பங்கேற்றனர். இதுகுறித்து ஆர்.டி.ஓ., கண்ணப்பனிடம் கேட்டதற்கு, ''கலெக்டர் உத்தரவின்படி பங்கேற்றேன்,'' என்றார்.