| ADDED : ஜன 16, 2024 10:11 AM
ஈரோடு: ஈரோடு மாநகரில் மின் வினியோகத்தை மேம்படுத்த, காவிரி கரையில், 14 மின் கோபுரங்களை மின் வாரியம் புதிதாக அமைத்துள்ளது.ஈரோடு மாநகர துணை மின் நிலையத்துக்கு, மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் மின் இணைப்புகளே, ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து, சமச்சீரான மின் வினியோகம் வழங்க தடைக்கல்லாக இருப்பது தெரிய வந்தது. இதை தவிர்க்க மாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். இதுபற்றி மின் வாரிய அலுவலர் கூறியதாவது: ஈரோடு துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கருங்கல்பாளையம், கே.ஏ.எஸ். நகர், மரப்பாலம், வெண்டிபாளையம், கோண வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகள், வெண்டிபாளையம் துணை மின் நிலைய கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.இதற்காக காவிரி கரையோரம், 14 மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உயரழுத்த மின் ஒயர்கள், டிரான்ஸ்பார்மருக்கு கொண்டு சென்று, இணைப்புகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படும். தற்போது துணை மின் நிலையத்துடன் மின் கோபுரங்களை இணைக்க வேண்டும். அவ்வாறு இணைத்தால் உடனடியாக வெண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகிக்க முடியும். ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட அளவு மின் இணைப்புகளை பிரித்து, வெண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் இணைக்கப்படும் பட்சத்தில் ஈரோடு மாநகர், புறநகர் பகுதிகளில் சமச்சீரான மின் வினியோகம் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.