| ADDED : பிப் 06, 2024 10:54 AM
ஈரோடு: நம்பியூர் தாலுகா இலத்துார், பழைய அரிஜன காலனியை சேர்ந்த மக்கள், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், நேற்று மனு வழங்கி கூறியதாவது:இலத்துார், பழைய அரிஜன காலனியில், மூன்றாவது தலைமுறையாக நாங்கள் வசிக்கிறோம். கடந்த, 2ம் தேதி எங்கள் பகுதிக்கு வந்த சிலர், ஜே.சி.பி., இயந்திரம் மூலம், நாங்கள் வசிக்கும் இடத்தை சுத்தம் செய்து, ஆக்கிரமிப்பு செய்ய முயன்றனர். நாங்கள் தடுத்த நிலையிலும் சுவர், அமைப்புகளை இடித்தனர். இதுகுறித்து கடத்துார் போலீஸில் புகார் செய்தோம். ஆக்கிரமிப்பு செய்ய முயன்றவர்களோ, தங்களிடம் ஆவணங்கள் உள்ளதாக கூறினர். இதனால் சிவில் பிரச்னை என்றும், நீதிமன்றத்தில் பார்த்து கொள்ளுமாறும் கூறி விட்டனர்.இதற்கிடையில் அவ்விடத்துக்கு பட்டா மாறுதல் உத்தரவை, மண்டல துணை தாசில்தார் வழங்கி உள்ளதாக கூறுகின்றனர். நாங்கள் இருக்கும் இடத்துக்கு முறையாக சொத்து வரி, மின் கட்டணம் செலுத்துகிறோம். பிற ஆவணங்களும் உள்ளன. தவறாக பட்டா வழங்கியது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.