உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 1.85 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்குகிறார்

1.85 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்குகிறார்

ஈரோடு, ஈரோடு மாவட்டத்துக்கு வருகை புரிந்த முதல்வர் ஸ்டாலின், இன்று நடக்கும் அரசு விழாவில், 1.85 லட்சம் பேருக்கு, 278 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்குகிறார்.கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், காரில் இரவு, 8:30 மணிக்கு ஈரோடு வந்தார். வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோடு எம்.பி., பிரகாஷ், எம்.பி., அந்தியூர் செல்வராஜ், மத்திய மாவட்ட செயலர் தோப்பு வெங்கடாசலம், வடக்கு மாவட்ட செயலர் நல்லசிவம், தி.மு.க., -- எம்.எல்.ஏ.,க்கள் அந்தியூர் வெங்கடாசலம், ஈரோடு கிழக்கு சந்திரகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்பு வழங்கினர். காளிங்கராயன் இல்லத்தில் ஓய்வெடுக்கும் முதல்வர், இன்று அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.இன்று காலை, 9:15 மணிக்கு புறப்படும் முதல்வர், மொடக்குறிச்சி தாலுகா ஜெயராமபுரத்தில், 4.90 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் மணிமண்டபம், பொல்லான் சிலையை திறந்து வைத்து மரியாதை செலுத்துகிறார். அங்கிருந்து ஓடாநிலை சென்று, தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி, புதிதாக அமையும் சிலை பணியை பார்வையிடுகிறார். அங்கிருந்து புறப்பட்டு சோலாரில், 63.50 கோடி ரூபாயில் கட்டப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார். அங்கு, புதிய பஸ் ஸ்டாண்ட் உட்பட நடந்து முடிந்த, 235 கோடி ரூபாய் மதிப்பில், 970 பணிகளை திறந்து வைக்கிறார். 91 கோடி ரூபாய் மதிப்பில், 230 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 278 கோடி ரூபாய் மதிப்பில், 1.85 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.அங்கிருந்து மதியம், 12:30 மணிக்குள் காளிங்கராயன் இல்லம் வந்து, மதிய உணவுக்கு பின் ஓய்வெடுக்கும் முதல்வர், மாலை, 4:30 மணிக்கு சித்தோடு ஆவின் வளாகத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட, ஆவின் அமைப்பை ஏற்படுத்திய எஸ்.கே.பரமசிவம் சிலையை திறந்து வைத்து, மரியாதை செலுத்துகிறார்.அங்கிருந்து சித்தோடு கொங்கு மாளிகை திருமண மண்டபத்தில் நடக்கும் திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு, காரில் கோவைக்கு சென்று, அங்கிருந்து விமானத்தில் சென்னை செல்கிறார்.முதல்வர் வருகைக்காக ஈரோடு, திருப்பூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி